திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு தினம்தோறும் ஐந்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதோடு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் வழக்கம் போல் இன்று (13.12.2024) காலை திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் ஒன்று இயக்கப்பட்டது.
இந்த ரயிலானது பாளையங்கோட்டை, செய்கண்டநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரத், கச்சன்விளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இத்தகைய சூழலில் தான் இந்த பயணிகள் ரயில் காலை 07. 50 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரயில் நிலையத்தில் நிற்காமல் கடந்து சென்றது. அதாவது தாதன்குளம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி சென்றது.
அப்போது இதனை அறிந்த ரயில் ஓட்டுநர்கள் அதன் பின்னர் ரயிலை பின்னோக்கி இயக்கினர். இதனையடுத்து தாதன்குளம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வழக்கம் போல் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகளை இறக்கிவிட்டும், அங்கு இருந்த பயணிகளை ஏற்றுக் கொண்டும் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.