திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச விழாவாக இன்று(13.12.2024) 2668 அடி உயரத்தில் உள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக இன்று விடியற்காலை 4 மணிக்கு பரணி தீபம் கோவில் கருவறையில் ஏற்றப்பட்டது. தீபத்தை காண பெருமழையும் பொருத்தப்படுத்தாமல் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். 14.5 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள மலையை பக்தியுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்புக்காக சுமார் 18,000 போலீசாரை திருவண்ணாமலை மாநகரத்துக்குள் குவித்துள்ளது மாவட்ட காவல்துறை. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தலைமையில் வடக்கு மண்ட ஐ.ஐீ அஸ்ராகார்க் முன்னிலையில் 14 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கு முன்பு எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு வெள்ளித்தேர் அன்றே எக்கச்சக்க காவலரை மாடவீதியில் குவித்திருந்தனர். அதேபோல் மகாரதம் வீதியுலாவின் போது அன்று காலை 6 மணிக்கெல்லாம் மாடவீதியில் எந்த வாகனமும், இருசக்கர வாகனம் கூட வராதபடி லாக் செய்தனர். மாடவீதியை நோக்கி வரும் அனைத்து சாலைகளையும் காவல்துறையினர் மூடியுள்ளனர். நகரத்தின் மிகப் பிரதான சாலையான சின்னக்கடை தெரு உட்பட அனைத்து பிரதான சாலைகளும் மூடப்பட்டதால், அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகள் வெளியே வரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களில் பிரதான சாலைகள் மூடப்படும் போது, ஆட்டோக்கள், வாகனங்கள் உள்ளே வருவதற்குக் குடியிருப்புகள் கொண்ட சிறிய தெருக்களை பயன்படுத்துவார்கள். தற்போது அந்த தெருக்களையும் காவல்துறையினர் மூடிவைத்துள்ளனர். இந்த முறை நகரத்தின் பிரதான சாலைகள் மட்டுமல்லாமல் முக்கிய வீதிகள் மற்றும் மாடவீதியைச் சுற்றியுள்ள சிறிய தெருக்களையும் காவல்துறையினர் மூடி வைத்துள்ளனர். இதுகுறித்து எதுவும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு தெருக்களிலும் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் சில இடங்களில் இதனால் தங்களது இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்படுவதாகக் குடியிருப்பு வாசிகள் மற்றும் மக்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
இதனிடையே மாடவீதியில் இருசக்கர வாகனங்கள் தான் வருவதற்கு அனுமதியில்லை என்று போலீஸ் கூறியிருந்தது. ஆனால், மாடவீதியைச் சுற்றியுள்ள மக்களும் மாடவீதியில் வருவதற்கு அனுமதியில்லை என்பதுபோன்ற சூழலைதான் காவல்துறை உருவாக்கியுள்ளது. இதனிடையே, பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள் மக்களை ஒருமையில் மிக கேவலமாகப் பேசியது, நடந்துகொண்டது பக்தர்களையும், உள்ளூர் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இன்று, விடியற்காலை பரணி தீபத்திற்கு பணிக்காக வந்த வருவாய் துறை அலுவலர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இரவு 11 மணி முதல் விடியற்காலை 2 மணி வரை காவல்துறை அதிகாரிகளுடன் வருவாய்த்துறையினர் வாக்குவாதம் செய்து ஓய்ந்து போயினர். பணி ஆணையை காண்பித்தும் உள்ளே அனுமதிக்கவில்லையாம். ஆர்.டி.ஓ, தாசில்தார், மாநகராட்சி கமிஷனர் உட்பட பல அதிகாரிகளையும் வெளியே நிறுத்தியுள்ளனர். ‘நீ யாரா வேனாலும் இரு, ஆனால் உள்ளே போகக்கூடாது’ எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் கார்களில் பந்தாவாக அம்மணியம்மன் கோபுரம் வாசல் வரை சென்றதாகத் தெரிவிக்கின்றனர்.
விடியற்காலை 2 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் கோவிலுக்கு காரில் வந்த போது அவருடைய வாகனத்தையும் தடுத்து நிறுத்தி அவரையும் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். பின்பு, அவர் காரை விட்டு கீழே இறங்கி வந்த போது அவரிடம் வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களுக்கு கோவிலுக்குள் பணி ஒதுக்கப்பட்டுள்ளது அந்த பணிகளைச் செய்வதற்கு கூட உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதிக்க மறுக்கின்றனர் எனத் தெரிவித்தனர்.
பின்பு அங்கிருந்த அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக கேள்வி எழுப்பிய பின், அவர்கள் அனைவரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் ஆட்சியர் காரை எல்லாம் உள்ளே அனுமதிக்கமுடியாது எனச்சொல்லி வெளியே நிறுத்திவிட்டனர். அதேநேரத்தில் மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தின் கீழ் பணியாற்றும் காவல் ஆய்வாளர்களின் கார்கள் எல்லாம் அம்மணியம்மன் கோபுரத்தின் அருகே சென்றதாக கூறப்படுகிறது. கோவிலுக்குள் சென்ற ஆட்சியரை மூன்று இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு, ‘நீங்க யார்...’ என கேள்வி எழுப்பி அதிர்ச்சியைத் தந்தனர் காவல்துறை அதிகாரிகள்.
லட்ச கணக்கான பக்தர்கள் தற்போது கிரிவலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். 14.5 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள கிரிவலப் பாதை வலம் வர முடியாதவர்கள், ஆயிரக்கணக்கான உள்ளுர் பக்தர்கள் அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள மாடவீதியில் வலம் வருவார்கள். இது வழக்கமானதுதான். இந்தாண்டு மாட வீதியில் வலம் வரக்கூடாது என காவல்துறை தடை விதித்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதுகுறித்து விசாரித்தபோது, மாடவீதியில் உள்ள பேகோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் வழியாக காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் காவல்துறைக்கு வேண்டப்பட்ட வி.வி.ஐ.பி.கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் சொகுசாக கோவிலுக்குள் செல்ல பேகோபுர சாலை மற்றும் அம்மணியம்மன் கோபுரச்சாலை பயன்படுத்தப்படுகிறது. இதனால் பக்தர்கள் நடந்து செல்லவும் இந்த பாதையில் தடை விதித்துள்ளது காவல்துறை. திறந்தவெளி சிறையில் கைதிகளை நடத்துவதுபோல் உள்ளுர் மக்களை, காவல்துறை பாதுகாப்பு என்கிற பெயரில் நடத்துகின்றன என அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர் உள்ளூர் வாசிகள்.