தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து புதிதாத உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களை மறுவரையறை செய்யாமல் தேர்தலை நடத்தக்கூடாது என திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தி்ல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது என்று திமுக உட்பட 12 தரப்பினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என்றும், விடுபட்ட 9 மாவட்டங்களை 4 மாதங்களில் மறுவரையறை செய்து தேர்தலை நடத்தவேண்டும்" என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள் கூட்டம், வரும் 8ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை தி. நகரில் உள்ள 'ஒட்டல் அக்கார்டு'வில் வைத்து நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், உள்ளாட்சிதேர்தலில் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் ஒருபோதும் நீதிமன்றத்தை நாடவில்லை. தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு முறையாக இல்லாததால் திமுக நீதிமன்றம் சென்றது. உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கான வேலைகளில் அதிமுக அரசுதான் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்தார்.