Skip to main content

'தமிழக மக்களுக்கே அல்வா கொடுத்துவிட்டார் ஸ்டாலின்'-எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 08/02/2025 | Edited on 08/02/2025

 

eps

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ''தமிழகத்தின் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. தொடர்ந்து தமிழகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது கண்டனத்திற்குரியது. டெல்லியில் காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது இந்தியா கூட்டணிக்கு மக்கள் சமட்டி அடி கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் பார்க்க முடிகிறது. இந்தியா கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. எல்லாருமே அதிகாரம்  நிறைந்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாத காரணத்தினால் மக்கள் மீது அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம் என்று ஒரு மமதையில் இந்தியா கூட்டணி இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது.

இந்த தேர்தல் மூலமாக காங்கிரஸ் கட்சி வாங்கிய ஓட்டுகளை பார்க்கையில் மிக மிக மோசமான நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு இருக்கிறது. இங்கு இருப்பவர்கள் தான் 'இந்தியா கூட்டணி... இந்தியா கூட்டணி...' என தூக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற மாநிலத்தில் இருப்பவர்கள் எல்லாம் நாடாளுமன்ற தேர்தலுக்குத் தான் அது பொருந்தும் என்று சொல்லிவிட்டார்கள். மேற்குவங்க முதல்வராக இருக்கட்டும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு தான் இது பொருந்தும் சட்டமன்றத்திற்கு பொருந்தாது என சொல்லிவிட்டார்கள். அப்படி என்றால் அந்த இந்தியா கூட்டணி எப்படி ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றிபெற முடியும். எனவே அந்த வாய்ப்பு இந்தியா கூட்டணிக்கு கிடையாது என நம்புகிறேன்.

ஈரோடு இடைத்தேர்தலில் போலி வெற்றியை திமுக பெற்றுள்ளது. வாக்காளர் ஓட்டுகளை திமுககாரர்களே போட்டு விட்டார்கள். எங்கள் கட்சி நிர்வாகிகள் ஓட்டை கூட அவர்களே போட்டு விட்டார்கள். ஓட்டுபோட போகையில் கடைசியில் பார்த்தால் எங்களுடைய முக்கிய பொறுப்பாளர் ஓட்டையே திமுககாரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆக கள்ள ஓட்டின் மூலம் அதிகமான வாக்குகளை பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டோம் என்று மமதையில் இருக்கிறார்கள்.

2026-ல் அதே சட்டமன்றத் தொகுதியில் என்ன நிலைமை ஏற்படும் என்பதை அந்த காலகட்டத்தில் நாங்கள் சொல்கிறோம். தேர்தல் நேரத்தில் வலிமையான கூட்டணி அமையும். கூட்டணி அமைத்தால் நிச்சயமாக உங்களையெல்லாம் அழைத்து தெரிவிப்போம். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. எங்களுக்கு எதிரி என்பது திமுக தான். அந்த அடிப்படையில் தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். வாக்குகளை ஒன்றாக சேர்க்க வேண்டும். எங்களை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் ஒன்றாக சேர்ந்து எதிரிகளை வீழ்த்துவதற்காக அமைக்கப்படுவது. தேர்தல் முடிந்த பிறகு அவரவர் கொள்கைப்படி தான் கட்சி நடத்துவோம்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் 'மத்திய அரசு நிதி ஒதுக்காமல் தமிழகத்திற்கு அல்வா கொடுத்துள்ளது' என முதல்வர் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''தமிழக முதல்வர் தமிழ்நாட்டுக்கே அல்வா கொடுத்துக் கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் அல்வா சாப்பிட்டதோடு தமிழ்நாட்டு மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார். 525 அறிவிப்புகளை வெளியிட்டீர்கள் என்ன ஆச்சு. சாதாரண அல்வா பெரிய அல்வா கிண்டி கொடுத்துவிட்டு போய்விட்டார்''என்றார்.

சார்ந்த செய்திகள்