Skip to main content

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

Vaikunda Ekadasi: Paramapatha gate opens at Srirangam temple

 

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3:30 மணிக்கு விருச்சிக லக்கினத்தில், ரத்தினங்கி பாண்டியன் கொண்டை பச்சைக்கிளி அலங்காரத்துடன் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (14.12.2021) அதிகாலை 4:44 மணிக்கு, ‘ரெங்கா ரெங்கா கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷத்துடன் ஸ்ரீ நம்பெருமாள் பரமபத வாசலைக் கடந்தார்.

 

முன்னதாக கடந்த நவம்பர் 10ஆம் தேதி முகூர்த்தகால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதியிலிருந்து பகல் பத்து விழாவில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலஸ்தானத்திலிருந்து அர்ஜுன மண்டபத்திற்கு வந்தடைந்து காட்சி அளித்தார்.

 

Vaikunda Ekadasi: Paramapatha gate opens at Srirangam temple

 

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சொர்க்கவாசல் திறப்புக்குப் பின்னர் பக்தர்களைத் தனிமனித இடைவெளியுடன் கோயிலின் உள்ளே அனுமதித்தனர். அவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக ஸ்ரீரங்கம் கோயில் நுழைவாயிலிலிருந்து தடுப்புகள் அமைக்கப்பட்டு, அதன் மூலமே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

 

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள், கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளனர். இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா என்பதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சொர்க்கவாசல் திருவிழாவிற்காக வரும் பக்தர்களின் தேவைக்காக காவல் உதவி மையமும், ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவிற்காக கோவில் வளாகத்தின் உட்புறப் பகுதியில் 117 சிசிடிவி கேமராக்களும், கோயில் வெளிப்புறப் பகுதியில் 90 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

 

மேலும், 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறப்பின்போது தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்