‘யானைகள் புத்திசாலியான விலங்கு. அவற்றின் உள்ளுணர்வு மனிதர்களுக்குக் கிடையாது. யானைகள் உள்ளிட்ட விலங்குகள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. கோயில் யானைகளை முறையாக நடத்தவேண்டும்.’
கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்ட பொதுநல வழக்கொன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறையும் வனத்துறையும் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டபோது, இவ்வாறு அறிவுறுத்தியிருந்தனர்.
தற்போது, கோயில் யானை ஒன்று பாகனால் தாக்கப்படும் காட்சி வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில், அதுகுறித்து விசாரித்தோம். “துன்புறுத்தப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பெண் யானை ஜெயமால்யதா..”என்றனர்.
என்ன நடந்தது?
கடந்த ஆண்டும் இதே ஜெயமால்யதா, புத்துணர்வு முகாமில் வைத்து யானைப் பாகனால் தாக்கப்படும் வீடியோ வலைத்தளங்களில் பரவியது. அதனால், பாகன் ராஜா சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார். தற்போதும் ஜெயமால்யதா பாகனால் தாக்கப்பட்டு பிளிறும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதுகுறித்த நமது கேள்விக்கு விளக்கமளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் முத்துராஜ் ”இது பழைய வீடியோ. இப்ப நடந்த மாதிரி ஏனோ பொய்யான தகவலைப் பரப்புறாங்க. 2021 ஜூன்-ல அந்தப் பாகனை வேலையை விட்டு அனுப்பிட்டாங்க. வீடியோவுல இருக்கிற பாகன் இப்ப வேலையிலேயே இல்லை. கோயில் கணக்காளர் சுப்பையா, காவலராகப் பணியாற்றும் கர்ணனைக் காலால் எட்டி உதைத்து வைரலானதும்கூட பழைய வீடியோதான். ஆண்டாள் கோவிலை மையப்படுத்தி, பழைய சம்பவங்களைப் புதிதாக நடப்பதுபோல் ஏன் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.”என்று வருத்தப்பட்டார்.
‘பழசு- புதுசு’என்ற ஆண்டாள் கோவில் தரப்பின் விளக்கம் ஒருபுறமும், விலங்குகள் கொடுமைத் தடுப்புச் சட்டம் மறுபுறமும் இருந்தாலும், கோயில் யானை பராமரிப்பில் இன்னும் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும் என்பதே விலங்கின ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.