சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்தவர் யனதன் (28). பட்டதாரியான இவர், தன்னை கருணைக் கொலை செய்திடுமாறு வேண்டுகோள் விடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை (டிச. 16) ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.
ஏன் இந்த விபரீத முடிவு? என்று அவரிடமே கேட்டோம்.
''இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கடந்த 1990ல் போர் நடந்தது. அப்போது, என் பெற்றோர் அங்கிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர். அப்போது முதல் சேலம் பவளத்தானூரில் இலங்கை அகதி முகாமில் வசித்து வருகிறோம். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான்.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால், எங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் 25 ஆண்டுக்கும் மேலாக வசித்து வரும் எனக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு உள்ளது, மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
இந்த நிலை என் சந்ததியினருக்கு வரக்கூடாது. இதனால் என்னை கருணைக்கொலை செய்யுமாறு கேட்டிருக்கிறேன். சேலம் மாவட்ட ஆட்சியர் மட்டுமின்றி, தமிழக அரசுக்கும் இக்கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளேன்,'' என்றார் யனதன்.