Skip to main content

விளையாட்டு வினையானது; 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி! 

Published on 25/02/2025 | Edited on 25/02/2025

 

Sports incident 4 children admitted to hospital

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ளது மண்ணவேளாம்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமராசு என்பவரது மகன் ரிசிகேஸ் (வயது 6), பழனிசாமி மகன் ரித்திக் (வயது 6), வீரப்பன் மகன் கருப்பசாமி (வயது 5) மற்றும் பரமசிவம் மகன் தனபிரியன் (வயது 5) என இவர்கள் 4 பேரும் நேற்று (24.02.2025) பள்ளி முடிந்து விடு திரும்பியுள்ளனர். அதன் பின்னர் அவர்களது வீடுகளின் அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் காருக்கு பயன்படுத்தக்கூடிய எலி கொல்லி ஸ்பேரே கீழே கிடந்துள்ளது.

இதனைக் கண்ட சிறுவர்கள் அதனைக் கையில் எடுத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது சிறுவர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி முகத்திலும் ஸ்பிரேயை அடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஸ்பிரேவில் இருந்த திரவம் சிறுவர்களின் வாயிற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுவர்களை உடனடியாக மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் மருத்துவர்கள் அவர்களை மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிறுவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் எலியைக் கொல்லும் ஸ்பிரேயரை கொண்டு விளையாடியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்