தென்மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆரம்ப கட்டத்தில் நெல்லை 40-52, தூத்துக்குடி 21-27 என்ற எண்ணிக்கையிலிருக்க, தென்காசி மாவட்டத்தில் மட்டும் கரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 3 என்ற அளவிலேயே நீடித்தது. இதில் குறிப்பாக மேலப்பாளையத்தில் மட்டும் 17 என்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, நெல்லை மாவட்டத்தை பீதியில் தள்ளிவிட்டது.
அதுமட்டுமல்ல, கடந்த 11- ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்தின் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மட்டுமே இருந்ததால் மாவட்ட மக்கள் சற்று ஆறுதலானார்கள். தென்காசி மற்றும் செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்களே அந்த மூன்று பேரும். அதன் பின்னர் தென்காசி மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 11- ஆம் தேதி முதல் 21- ஆம் தேதி வரை 31 என்ற அளவில் எகிறிவிட்டது. ஆரம்ப கட்ட மூவரைத் தவிர மீதமுள்ள 28 பேர்களும் மாவட்டத்தின் புளியங்குடி நகரின் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் புளியங்குடி நகரம், பதற்றமும் பீதியுமடைந்துவிட்டது. தென்பக்கம் மேலப்பாளையப் பீதியையும் பின் தள்ளிவிட்டது புளியங்குடியின் கணக்கு.
கடந்த 10- ஆம் தேதியன்று புளியங்குடி மெயின் பஜாரின் மேல்புறத்தெருவைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் காய்ச்சலும் இருமலுமாக நகரின் அரசு மருத்துவமனைக்குப் போயிருக்கிறார். அவரை சோதிக்கும்போது, சந்தேகப்பட்ட டாக்டர்கள் அவரை பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, அங்கே அவருக்கு சோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட, புளியங்குடி நகராட்சி உஷாரானது. அவர் வசிக்கின்ற தெருவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நகராட்சி சுகாதாரத் துறையினர் அவரது வீடு மற்றும் தெரு முழுவதையும் கிருமி நாசினி கொண்டு துடைத்தெடுத்தனர்.
தொடர்ந்து அந்தத் தெருவிலுள்ள அனைத்து வீட்டிலிருப்பவர்களின் 75 பேர்களிடமிருந்து ரத்த மாதிரி எடுத்து சோதனையிட்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்த ரிசல்ட்களும் ஒரே நாளில் கிடைத்துவிடாதாம். இதன் அனைத்து முடிவுகளும் வருவதற்கு மூன்று நான்கு தினங்கள் பிடிக்கும் என்பதால், முதல் நாள் சோதனை அறிக்கையில் அந்த முதியவரின் இரண்டு மகள்கள், அடுத்த வீடு, பக்கத்து வீட்டுக்காரர் என்று அவருடன் தொடர்பிலிருந்த நான்கு பேருக்கும் கரோனா பாஸிட்டிவ் என்று வர பதறிப்போன அதிகாரிகள், அவர்களை சிகிச்சைக்காக அனுப்பியதோடு மாவட்டத்தில் முதன்முதலாக, டெல்லி நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்பதை விடுத்து வேறொருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என்ற அடிப்படையிலும், அது சமூக தொற்றாக மாறிவிடக் கூடாது என்ற பதைபதைப்பிலும், அந்த பெரியவரிடமே எங்கெல்லாம் சென்றீர்கள் யார் யாருடன் பழகினீர்கள் என்று விசாரித்திருக்கின்றனர். அவரின் ரூட் மேப்பை எடுக்க முயன்றனர்.
ஆனால் அவரோ, நான் வயசாளி வெளிய எங்கயும் போனதில்ல, வீட்லயேயிருப்பேன் என்று தொடர்ந்து சொல்லியிருக்கிறார். அதே சமயம் அவர் மூலம் தொற்று அவர் மகள்களுக்கு வந்ததா? என்றும் குழம்பினர். தொடர்ந்து நடவடிக்கையாக, அவரது மகள்களில் ஒருவர் பக்கத்து நகரின் கோர்ட்டில் பணிபுரிபவர் என்பதால், வேலையின் பொருட்டு ஆட்டோவில் மூன்று பேருடன் போய் வந்திருக்கிறார். மேலும் நீதிமன்ற பணியிலிருந்தபோது உடன் பணியாற்றியவர்கள் என 12 பேர் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனாலும் அவரின் தந்தையான அந்த பெரியவரோ, நிலவரத்தை மறைக்கும் வகையில் சொன்னதையே திரும்பவும் சொல்லியிருக்கிறார். அன்றைய சோதனை அறிக்கையில், பெரியவரின் பக்கத்து வீட்டுக்காரர், அடுத்த தெருவைச் சேர்ந்தவர் என்று நான்கு பேர்களுக்கு பாஸிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது.
அதன்பிறகே அவர்களிடம் மேற்கொண்ட கெடுபிடி விசாரணையில் பெரியவர் பலருக்கு வட்டிக்கு பைனான்ஸ் செய்து வந்திருக்கிறார். வட்டித் தொகையை வசூல் செய்யும் பொருட்டு பலரிடம் பழக வேண்டியிருந்திருக்கிறது. தவிர தன் வட்டித் தொழில் பற்றித் தெரிந்தால் இவ்வளவு தொகைகள் எப்படி வந்தன என்ற ஐ.டி. கேள்விகள் வரும் என்பதால் அதை மறைக்கவே தன் தொடர்பை மறைத்தது தெரியவந்திருக்கிறது.
அதற்குள்ளாக மற்றப் பகுதிகளின் சோதனை ரிசல்ட் வரவே, அடுத்தடுத்த நாட்களில் பெரியவர் மூலமான தொடர்பால் அடுத்தடுத்த தெருக்களிலுள்ள 12 பேருக்கு தொற்று பரவ, பெரியவர் மூலமான தொற்று பரவியதில் 23 என்ற அளவில் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. இதனால் வேகமெடுத்த நிர்வாகம், ஏற்கனவே லாக் செய்து சீல் வைக்கப்பட்ட பெரியவரின் வீட்டுத் தெருவை ஒட்டிய நான்கு தெருக்களையும் தகரம் கொண்டு அடைத்து மக்கள் வெளியேற முடியாதபடி லாக் செய்து பாதுகாப்பில் கொண்டு வந்தது.
மாவட்டத்தில் ஒரே நகரில் இத்தனை பேர் என்றானதும், நெல்லை ரேன்ஜ்ஜிற்காக அமைக்கப்பட்டத் தென் மண்டல கரோனா கண்காணிப்பு சிறப்பு அதிகாரி அடிஷனல் செகரட்டரியும், இயக்குனருமான கருணாகரன், புளியங்குடியில் ஆய்வு மேற்கொண்டதையடுத்து புளியங்குடி நகரமே தனிமைப்படுத்தப்பட்டு எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. கிட்டத்தட்ட நகரமே துண்டிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற முடியாதவாறு செய்யப்பட்டன. அதேநேரத்தில் அவர்களின் தேவைகள் வீடு தேடிச் செல்கிற அளவுக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இந்தச் சூழலில் அடுத்த அடியாக பெரியவரின் தெருவை ஒட்டிய இன்னொரு தெருவிலுள்ளவர்களின் ரத்த மாதிரிகளின் சோதனையில், ஒரே வீட்டைச் சேர்ந்தவர்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர், மற்றும் ஒருவர் என 5 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட அரண்டுவிட்டது நகரம். பெரியவரின் தொடர்பு தவிர்த்து இவர்களுக்கு வந்த காரணம் பற்றி குழம்பினர் அதிகாரிகள். அதே சமயம் ஏப். 21 அன்று கேரளாவின் கொல்லம் அருகே நடந்து வந்த ஒருவரை மடக்கி விசாரித்திருக்கிறார்கள் கேரள அதிகாரிகள். குளத்துப்புழாவிலிருக்கும் அந்த நபர் புளியங்குடியிலுள்ள தனது உறவினரின் வீட்டில், கடந்த 16- ஆம் தேதி நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்துவிட்டு குளத்துப்புழா திரும்புவதாகவும், கிடைத்த வாகனத்தில் பயணம் செய்தும், கால்நடையாகவும் சென்று வந்ததை தெரிவித்திருக்கிறார். இதனால் சந்தேகப்பட்ட கேரள அதிகாரிகள் அவரது ரத்த மாதிரியைச் சோதனைக்காக எடுக்க முயன்றபோது மல்லுக்கட்டி எடுக்கவிடாமல் முரண்டு பிடித்திருக்கிறார்.
வேறு வழியில்லாமல், அவரை நகரவிடாமல் கயிற்றால் கட்டி ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ததில் அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தகவலை கேரள அதிகாரிகள் தென்காசி மாவட்டம் நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அதன்பின்னர் நடந்த விசாரணையில் தொடர்புடைய புளியங்குடி வீட்டார், அவர் வந்து போனதை உறுதி செய்திருக்கிறார்கள். அவர் மூலம் அந்த வீட்டின் 5 பேருக்கு தொற்று பரவியது அதன் பிறகே வெளிவந்திருக்கிறது. இதனால் புளியங்குடியின் ஒரே பகுதியில் மட்டும் தொற்று எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது. தற்போது குளத்துப்புழா நபர் சென்று வந்த ரூட் மேப் எடுக்கப்பட்டு, அவர் பழகிய நபர்கள் தொடர்பாளர்களும் கண்டறியப்பட்டு வருகின்றனர். இதனால் கேரளாவின் குளத்துப்புழா நகரமும் சீல் வைக்கப்பட்டது.