பெற்றோரிடம் இருந்து சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட மகன்கள் அவர்களுக்கு உணவு அளிக்காமல், வீட்டைவிட்டு வெளியேற்றியதால் அந்த பத்திரப்பதிவை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர், அந்த சொத்துக்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளார். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007ன் கீழ் இந்தியாவிலேயே முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ப்பெண்ணாத்தூர் அடுத்துள்ள வேடநாத்தம் கிராமத்தைச் சேர்தவர்கள் கண்ணன் - பூங்காவனம் தம்பதியினர். இவர்களுக்கு பழனி, செல்வம் என இரண்டு மகன்கள். கண்ணன் தான் சுயமாக சம்பாதித்த ஐந்து ஏக்கர் நிலத்தை இரண்டு பேருக்கும் சமமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
நாளடைவில் மகன்கள் இருவரும் கவனிக்கவில்லை. இதனால் கூலி வேலை செய்தும், பிச்சையெடுத்தும் பிழைப்பை நடத்தி வந்துள்ளனர். தனது நிலைமை குறித்து கண்ணனும் அவரது மனைவியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, விசாரணை நடத்திய கலெக்டர், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ததோடு, கண்ணன் மற்றும் பூங்காவணம் பெயருக்கு பத்திரப்பதிவு, பட்டா, சிட்டா ஆகியவற்றை மாற்றி சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்தார். இனி இந்த சொத்துக்கள் கண்ணன் பூங்காவணம் அனுபவத்தில் இருக்கும், இவர்கள் பார்த்து இனி யாருக்கு வேண்டுமானலும் சொத்துக்களை ஒப்படைக்கலாம் என்று செய்தியாளர்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.