
பாரத் ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி தினமாக தமிழக அரசு கொண்டாடும் அக்டோபர் 15ஆம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் தமிழக எக்ஸாம் வாரியஸ் கிளப் அமைப்பின் நிறுவன தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்காக எழுதிய, ‘பரீட்சைக்கு பயமேன்’ (Exam warriors) என்னும் புத்தகத்தை தமிழகம் முழுக்க கொண்டுசேர்க்கத் துவக்கப்பட்டிருக்கும், ‘தமிழக எக்ஸாம் வாரியஸ் கிளப்’ பற்றி முதல்வரிடம் விரிவாக எடுத்துரைத்தார் பிரசாத்.
சந்திப்பின்போது, எக்ஸாம் வாரியஸ் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் பேசிய பேச்சினை நினைவுகூர்ந்து பாராட்டு தெரிவித்த ஏ.என்.எஸ்.பிரசாத், முதல்வரிடம் ஒரு கோரிக்கையையும் முன் வைத்தார்.
“தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் அத்தனை மாணவர்களும் பயனடையும் வகையில் மாணவர்களின் கைக்கு போய் சேரவேண்டும் என்ற எங்கள் முயற்சிக்கு பெரிதும் துணையாக பல ஏழை மாணவர்களுக்கு விலையில்லா புத்தமாக அரசாங்கமே கொண்டு போய் சேர்க்கவேண்டும்” என்பதுதான் அந்த கோரிக்கை.
அதற்கு முதல்வர், “நானும் இந்த புத்தகத்தைப் படித்தேன். என் மகனுக்கும் இப்புத்தகத்தின் மதிப்பை எடுத்துக் கூறிப் படிக்கச் சொன்னேன்.
பிரதமரின் மேலான கருத்துக்கள் அனைத்து மாணவர்கள், இளைஞர்களிடமும் சென்று சேர்க்க வேண்டும். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அனைத்து பிரிவினர்களும் இப்புத்தகத்தை படிக்கவேண்டும்” என்றும் கூறினார்.
மேலும், ‘‘இந்த சந்திப்பு ஒரு மகிழ்வான சந்திப்பு. தமிழகத்திலுள்ள 35 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு இப்புத்தகம் சென்றடைய எடுத்துக்கொண்ட இந்த சமூக அக்கறைக் கொண்ட முயற்சிக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்று கூறி வாழ்த்தினார் முதல்வர்.