திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் காலமானார்.
திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் (வயது65) சென்னையில் காலமானதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் 400க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 1,400 க்கு மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பிறைசூடன். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த இவர் அவருடைய சினிமா பயணத்திற்குப் பிறகு சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். எந்தவித உடல் நலக்குறைபாடும் இல்லாத நிலையில் இன்று மாலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் எழுதிய 'நூறுவருஷம் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும்தான்' பாடல் ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மிக நல்ல பாடல்களைக் கொடுத்துள்ளார். கவிஞர் பிறைசூடனின் உயிரிழப்பு திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீனம்மா மீனம்மா, சோலப் பசுங்கிளியே, ஆட்டமாக தேரோட்டமா உள்ளிட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதேபோல் தமிழ் சினிமாவின் முக்கிய இசைமையாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோரின் இசையிலும் இவரின் பாடல் வரிகள் கலந்துள்ளது.
நக்கீரன் தனது இலக்கிய இதழான இனிய உதயத்தில், மாணவர்களுக்கான கவிதை போட்டி நடத்தி, புனே ஸ்ரீபாலாஜி பல்கலைக்கழகம் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கியபொழுது அந்த போட்டியின் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுக்க, நடுவர்களில் ஒருவராக இருந்து உதவியவர் கவிஞர் பிறைசூடன்.