காவலர் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டரின் மகனே திருட்டில் ஈடுபட்ட சம்பவம் புதுப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் ஐந்து வீடுகளில் தொடர்ச்சியாக பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் மொத்தம் ஐந்து காவலர்களின் வீடுகளில் 16 சவரன் நகைகள், 34,000 பணம், 3 செல்போன்கள் திருடு போனது தெரிய வந்தது.
இது தொடர்பாக எழும்பூர் போலீசார் காவலர் குடியிருப்பு பகுதிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் எழும்பூர் ஆயுதப்படையில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் மகன் நந்தகோபால் என்பவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிலிருந்த நந்தகோபாலை பிடித்து போலீசார் விசாரித்ததில் ஐந்து வீடுகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நந்தகோபாலையும் அவனுக்கு உதவியாக இருந்த அருண் என்பவனையும் போலீசார் கைது செய்தனர். தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்து வந்த நந்தகோபால் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், போதைப் பொருட்களை வாங்குவதற்காக திருட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.