இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு மேகதாது அணைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லை என்றாலும்கூட நாங்கள் அணையைக் கட்டியே தீருவோம் எனத் தெரிவித்து வருகிறது. அண்மையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 'மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு தொழில்நுட்ப அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட எந்த அனுமதிகளையும் மத்திய அரசு அளிக்கக்கூடாது' என வலியுறுத்தி இன்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இத்தீர்மானத்தைத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தாக்கல் செய்ய இருக்கிறார்.