தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், போனஸ் என்று உற்சாகமாக பெறும் தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்க, அரசாங்க ஊழியர்களுக்கு அரசே போனஸ் வழங்கி மகிழ்விக்கிறது. இப்படி சலுகைகள் வழங்கபட்டாலும், இவற்றையெல்லாம் தாண்டி புது ரூட் போட்டு பணம் வசூலிக்கும் முறையை காவல்துறை துவங்கி உள்ளது.
திருச்சி மாவட்டத்தை சுற்றி 14 யூனியன் பஞ்சாயத்துகள் உள்ளது. அதில் 404 கிராம பஞ்சாயத்துகள் உள்ளடங்கி உள்ளது. கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சி தலைவர்கள் விழிப்புணர்வு கொடுக்க வந்த அதிகாரிகள், காவல் துறையினரோடு நல்ல நட்பை உருவாக்கியுள்ளனர். அந்த நட்பின் மூலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு ஒவ்வொரு கிராம ஊராட்சி தலைவர்கள் தீபாவளி பரிசாக 3000 ரூபாய் கொடுத்து கவனித்துள்ளனர். அதே போல் தீயணைப்பு துறைக்கும் அந்தந்த ஊராட்சி சார்பில் அதன் தலைவர்கள் கவனித்துள்ளனர்.
இந்த கவனிப்பின் நோக்கம் பற்றி விசாரித்தபோது, நாளை எந்தவித சட்டம் & ஒழுங்கு பிரச்சனை வந்தாலும் ஊராட்சி தலைவருக்கு சாதகமாக அமையும்படி ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கவனிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வாய் மொழி ஒப்பந்தத்தை ஒரு சில புறநகர் காவல் நிலையங்கள் மிக மும்மரமாக செயல்படுத்தி தீபாவளிக்குள் வசூல் வேட்டையை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.