சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையானதையடுத்து நேற்று (08.02.2021) பெங்களூருவில் இருந்து புறப்பட்ட நிலையில், சசிகலா இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். நேற்று சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தை தொடங்கிய நிலையில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்திருந்தது. இதற்காக தமிழக எல்லையில் போலீசார் சார்பில் சசிகலாவுக்கு நோட்டீஸும் கொடுக்கப்பட்டது. இதனால் தமிழக எல்லையான ஜூஜூவாடியில் சசிகலா பயணிக்க அதிமுக உறுப்பினர் ஒருவர் தன்னுடைய காரை (அதிமுக கொடி பொருத்தப்பட்ட கார்) கொடுத்திருந்தார். இதனையடுத்து சசிகலாவுக்கு கார் கொடுத்த நிர்வாகி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே சசிகலாவுக்கு கார் கொடுத்தது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சூளகிரி அதிமுக ஒன்றியச் செயலாளர் சம்மங்கி, அதிமுக தொண்டரின் காரில் தமிழகம் திரும்ப வேண்டும் என சசிகலா விருப்பப்பட்டதால் காரைக் கொடுத்தாக தெரிவித்தார்.
''சசிகலாவுக்கு அதிமுக சார்பில் வரவேற்பு கொடுத்தோம். அப்பொழுது அவரது கார் பழுதானது. அதிமுக தொண்டர் ஒருவரின் காரில் பயணிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அதனால் என் காரைக் கொடுத்தேன். தலைமை என்ன முடிவெடுத்தாலும் சரிங்க, சசிகலாவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என முடிவு பண்ணிருக்கோம்'' என்றார்.