சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றிப் பெற்றுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (11/12/2020) காலை 10.00 மணி நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் செந்தில், அ.தி.மு.க. சார்பில் பொன்மணி பாஸ்கர் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்களுக்கு தலா 8 வாக்குகள் கிடைத்தது தேர்தல் சமநிலையில் முடிந்ததால் குலுக்கல் முறையில் அ.தி.மு.க. வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த தகவலை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று (11/12/2020) மதியம் 03.00 மணிக்கு மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4, டிசம்பர் 4 என நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் மொத்தமுள்ள 16 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி- 8 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணி- 8 வார்டுகளிலும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் காரணமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.