Skip to main content

"ஒருவருஷம் தான் உங்க பொண்ணுக்கு டைம்னு சொல்லிட்டாங்க!" - பணம் இல்லாமல் துடிக்கும் தாய்!

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

sivagangai district college student need to help for the treatment

 

இன்னும் மூணு வருஷந்தா உங்க பொண்ணு உயிரோட இருப்பாங்க. புடிச்சத செஞ்சிபோடுங்க என டாக்டர் சொல்லி, ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. இன்னும் ஒருவருஷம்தான் என் பொண்ணு உயிரோட இருப்பாளாம். ட்ரீட்மெண்ட் பண்ணா காப்பாத்திடலாம்னு சொல்றாங்க. அவ்ளோ காசுக்கு நான் என்ன பண்றதுன்னு தெரியல. எதாச்சும் உங்களால பண்ணமுடியுமா எனக் கண்ணீர் ததும்பிய கண்களுடன் கையறு நிலையில் பேசத் தொடங்கினார் ஜெயபாரத தேவி.

 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ஜெயபாரத தேவி. திருமணம் ஆகி சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கணவர், மூன்று குழந்தைகளுடன் ஜெயபாரத தேவியை கைகழுவிவிட்டார். இவர்களுக்கு 2 மகள், 1 மகன். வீட்டு வேலை செய்து, பத்து பாத்திரம் கழுவி, பிள்ளைகளை வளர்த்துவந்தார் ஜெயபாரத தேவி. பிள்ளைகள் வளர வளர அவர்களுக்கான தேவைகளும் வளர்ந்தது. அவர் ஒருவரின் சம்பாத்தியம் மட்டுமே நால்வரின் தேவைக்கு ஈடு கொடுக்கவில்லை. விளைவு, மகனின் படிப்பு தடைபட்டது. இருளில் தவிக்கும் குடும்பத்தைக் கரையேற்ற, பெயிண்டர் வேலைக்கு புறப்பட்டார் மகன். மூத்த மகள் சிவககங்கை அரசு பெண்கள் கல்லூரியில், முதலாமாண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். இரண்டாவது மகள் மானாமதுரையில் உள்ள பள்ளியில், 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெரிய வசதி இல்லையென்றாலும், நிம்மதியான சூழலை நோக்கி வாழ்க்கை நகரத் தொடங்கியது.

 

பணம், காசு எல்லாம் வேண்டாம் ஆரோக்கியத்தோட இருந்துட்டா போதுமென நினைத்த ஜெயபாரத தேவியின் ஆசை, மிக விரைவிலேயே கருகிப் போனது. கல்லூரியில் படிக்கும் மூத்த மகளின் பெயர் லாவண்யா. கடந்த சில ஆண்டுகளாக, லாவண்யா வலிப்பு நோயால் அவதிப்பட்டுள்ளார். செருவாடு சேத்துவைத்திருந்த பணத்தையெல்லாம் பிரித்து, மகளுக்கு மருத்துவச் செலவு பார்த்துள்ளார் ஜெயபாரத தேவி. வலிப்பு நோயாக இருந்தவரை கூட அவர் பெரிதாக அச்சப்படவில்லை. இதன்பிறகு, லாவண்யாவின் பாதம், கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் இருந்து தானாகவே ரத்தம் வெளியேறத் தொடங்கியிருக்கிறது. இதனால், பதற்றமடைந்த லாவண்யாவின் அம்மா, மருத்துவமனை அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்துள்ளார். இதற்காக, லாவண்யா நிறைய மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு குணமாகியிருக்கிறார். தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதே என நினைத்து நிம்மதி பெருமூச்சி விடுவதற்குள், அடுத்த பிரச்சனை அணிவகுத்து நின்றுள்ளது.

 

அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்ட மருந்து மாத்திரைகளால் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் ஜெயபரத தேவி, சரிவர ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டால் மகளை காப்பாற்றிவிடலாம் எனக் கூறுகிறார். இல்லையென்றால், நீண்ட நாள் மகள் உயிரோடு இருக்கமாட்டார் எனக் கூறுகிறார். நம்மிடம் பேசும்போதே, லாவண்யா மயக்கம் போட்டு தரையில் அமர, அவரை பத்திரமாக கூட்டிச் சென்று படுக்கவைத்து போர்வை போர்த்திவிடுகிறார் தாயார் ஜெயபாரத தேவி. இதையெல்லாம், பார்த்துக்கொண்டு நிற்கும்போதே நமக்கும் கண்ணீர் முட்டியது. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் அம்மா.. கவலைப்படாதீங்க எனச் சொல்லும்போதே முட்டிநின்ற கண்ணீர், கொட்ட ஆரம்பித்துவிட்டது. தாளமுடியாத கண்ணீருடன் அங்கிருந்து விடைபெற்றோம்.

 

லாவண்யாவுக்கு அரசு தலையிட்டு உதவவேண்டும் என்பதை விட, அவரை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் ஏக்கமாகவும் இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்