எதிரிக்கும்பல் பழிக்குப்பழியாக ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டி தாக்குதல் நடத்திய நிலையில், பாதுகாப்பிற்காக அருகிலுள்ள கனரா வங்கியில் தஞ்சமடைந்தார் ரவுடி ஒருவர். அவரைக் காப்பாற்றும் பொருட்டு தன்னுடைய துப்பாக்கியைக் கொண்டு எதிரிக்கும்பலை நோக்கி சுட்டுத்தள்ளிக் காப்பாற்றினார் வங்கியின் செக்யூரிட்டி. இதனை " பழிக்குப் பழியாக விரட்டி வெட்டப்பட்ட ரவுடி.. சுட்டுக் காப்பாற்றிய வங்கி செக்யூரிட்டி..!!! என்ற தலைப்பினில் இன்று நமது "நக்கீரன்" இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை அடிப்படையாக் கொண்டு காவல்துறையினரோ உயிரைக்காப்பாற்றிய காவலாளிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவரங்காட்டை சேர்ந்தவர் ஊமைத்துரை. அமமுக-வில் மானாமதுரை மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த இவரது மகன் சரவணனை கடந்த மே மாதம் 26ம் தேதி கொன்று போட்டது ஒரு டீம். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவனாக கருதப்பட்ட அதே ஆவரங்காடு தங்கராஜை பழி தீர்க்க காத்திருந்தது ஊமைத்துரை தரப்பு. இவ்வேளையில், இன்று நண்பகலில் மானாமதுரைக்கு வந்த தங்கராஜை 3 இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் சரமாரியாக வெட்டி தாக்க, உயிர் தப்பிப்பதற்காக அருகிலுள்ள கனரா வங்கியில் அடைக்கலமானார் தங்கராஜ்.
விரட்டி வந்த எதிர் தரப்பினர் வங்கியில் நுழைந்து கொலை செய்ய முற்பட, வங்கியின் காவலாளியும், முன்னாள் ராணுவ வீரருமான சிவகங்கை வீரமாகாளி மகன் செல்வநேரு தன்னுடைய டபுள் பேரல் துப்பாக்கியால் சுட்ட நிலையில் எதிர் தரப்பினை சேர்ந்த தமிழ்செல்வம் காலில் குண்டடிப்பட்டு காயமடைந்தார். மற்றவர்கள் தப்பி ஓடிய நிலையில் வெட்டுப்பட்ட தங்கராஜ் காப்பாற்றப்பட்டார். வங்கி காவலாளியின் சமயோசித புத்தியால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டதால் மானாமதுரை டி.எஸ்.பி.கார்த்திக்கேயன் பரிந்துரையின் பேரில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ருபேஷ்குமார் மீனா, வங்கி காவலாளி செல்வநேருவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இதனால் முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.