
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையானதையடுத்து நேற்று (08.01.2021) பெங்களூருவில் இருந்து புறப்பட்ட நிலையில், சசிகலா இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். சென்னையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ''அதிமுகவில் இன்னமும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். ஸ்லீப்பர் செல்கள் எம்.எல்.ஏவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம். அதிமுக பொதுக் குழுவைக் கூட்டவோ, கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது.” எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில் ''அதிமுகவிற்கு திமுகவைவிட அதிக தொல்லை கொடுத்தது டி.டி.வி.தினகரன்தான். தனிக்கொடி, தனிக்கட்சி, தனிப்பாதை என அதிக தொல்லை கொடுத்தார். தனிக்கொடியோடு தனிச்சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியாது. எதையும் சந்திக்கத் தயார் என்ற சூழ்நிலையில்தான் முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார்'' என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.