![8way](http://image.nakkheeran.in/cdn/farfuture/5RZF-je9W4Zm2eeUQOjWKWToao_Pm79Y6UeD-zpG_AQ/1538090018/sites/default/files/inline-images/1024px-Outer_Ring_Road_Nehru_ORR_at_Narsinghi-1_0.jpg)
சேலத்தில், விவசாயம் மற்றும் வனவளத்தை அழிக்கும் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்திய எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் இன்று (செப். 26, 2018) கைது செய்தனர்.
சேலம் & சென்னை இடையே எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மொத்தம் 277.3 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த புதிய வழித்தடம் அமைகிறது.
இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்குச் சொந்தமான, ஆண்டுக்கு முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலம். இதனால், எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு ஆரம்பத்தில் இருந்து விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் பலர் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிடக்கோரி, கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்காக கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தனர்.
இவ்வாறு கையெழுத்து இயக்கம் நடத்தக்கூடாது என்றுகூறி பள்ளப்பட்டி போலீசார் தடுத்தனர். ஆனாலும், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் மக்களிடம் திட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறுவதில் ஆர்வம் காட்டினர். மக்களும் ஆர்வமாக வந்து, எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாசகம் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களில் கையெழுத்திட்டனர்.
இதைப்பார்த்த போலீசார் மேலும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் கையெழுத்து வேட்டையை உடனடியாக நிறுத்திவிட்டு கலைந்து செல்லும்படி கூறினர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கையெழுத்து இயக்கம் நடத்திய கூட்டமைப்பு நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் காவல்துறையினரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். போலீசார், கைது செய்யப்பட்டவர்களை அருகில் உள்ள ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் அடைத்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''விளைநிலங்களை அழித்து, நிறைவேற்றப்படும் எட்டு வழிச்சாலைத் திட்டம் பொதுமக்களுக்கு ஏற்றது அல்ல. இது விவசாயத்தை அழிக்கும் திட்டம். எனவே இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, அதை முதல்வரிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டிருந்தோம். ஜனநாயக முறையில் கையெழுத்து இயக்கம் நடத்திய எங்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் அடக்குமுறைகளை ஏவி கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது,'' என்றனர்.