தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், "இந்தியாவிலேயே முதன்முறையாகச் சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அரசு மருத்துவமனைகளுக்கு ரூபாய் 2.6 கோடியில் 40 டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்படும். முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூபாய் 1,248 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 4,280 கோடியில் வட்டார மருத்துவமனைகள், நகர்ப்புற மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ரூபாய் 258 கோடியில் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். 1,583 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ரூபாய் 266.73 கோடியில் அமைக்கப்படும். முதன்முறையாக அரசு மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும். ரூபாய் 70 கோடியில் 389 நடமாடும் மருத்துவக் குழு வாகனங்கள் வாங்கப்படும். ஊரக பகுதிகளில் 2,400 துணை சுகாதார நிலையங்கள் ரூபாய் 35.52 கோடியில் மேம்படுத்தப்படும்.
ஆறு அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த அவசரக் கால மகப்பேறு பச்சிளங் குழந்தை பராமரிப்பு மையம் நிறுவப்படும். கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்தப் புதிதாக 2,400 செவிலியர்கள் நியமிக்கப்படுவர். 2,448 சுகாதார ஆய்வாளர்களும் புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள். அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதியோர் மறதி நோய்க்கான சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும்.
ரூபாய் 69.18 கோடியில் கூடுதலாக 188 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும். ரூபாய் 5.10 கோடியில் 17 புதிய ஆர்டி- பிசிஆர் கருவிகள் வாங்கப்படும். சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் ரூபாய் 4 கோடியில் மரபணு பகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்படும். எச்.ஐ.வி./ எய்ட்ஸ் தடுப்பு ஆதரவு பராமரிப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காக ரூபாய் 128.27 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளனர்.