தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டமன்றத்தில், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ஒரு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் பாமகவினர் பேச அனுமதி கேட்டனர். அதற்கு அவைத் தலைவர் அப்பாவு, ‘அரசியல் செய்ய வேண்டாம்’ என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின் சட்டமன்ற வளாகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “குரூப் 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகளில் 6 சதவீதம்தான் இட ஒதுக்கீடு வருகிறது. ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். பணிகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லை. இப்படி எல்லாவற்றிலும் பின் தங்கி இருப்பதனால், இராமதாஸ் 44 ஆண்டுகளாக போராடி 10.5% இட ஒதுக்கீடு வாங்கியுள்ளார். இதற்காக 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நியாயமாக 10.5% அல்ல 15% மேல் இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும்” என்று பேசினார்.