சிவகாசி முன்னாள் அதிமுக எம்.பி.யும், விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளருமான டி.ராதாகிருஷ்ணன் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து அவருடைய உடலுக்கு விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, அன்வர்ராஜா, நத்தம் விஸ்வநாதன், மாபா பாண்டியராஜன், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக அமைப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, கோபால்சாமி, பொன்னுபாண்டியன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதே நேரத்தில் இறந்த ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் பலரும் திமுக, அமமுக போன்ற கட்சிகளில் முக்கியப் பொறுப்புகள் வகிப்பதால் கட்சி பேதமின்றி மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ராதாகிருஷ்ணனின் மகன் தர்மராஜாவை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூற, வி.கே.சசிகலாவோ தனது ட்விட்டர் பக்கத்தில் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் வனராஜா, சிவகாசி திமுக ஒ.செ. விவேகன்ராஜ், சிவகாசி திமுக மேயர் சங்கீதா இன்பம் உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
17 வருடங்களுக்கு முன் இதே விருதுநகர் மாவட்டம், தந்தை மரணமடைந்த நிலையில் அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வரத் தயங்கிய மகனைப் (அதிமுக அமைச்சர்) பார்த்துள்ளது. இன்றோ, திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னாள் அதிமுக எம்.பி.யின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
அரசியல் கட்சியினர் என்றாலே மாற்றுக் கட்சியினரை மாச்சரியத்தோடு பார்க்கும் நடைமுறை திமுக ஆட்சி நடைபெறும் காலகட்டத்தில் மறையத் தொடங்கியிருப்பது ஆறுதலளிக்கிறது.