அண்மையில் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு உணவு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் சிக்கும் தரமற்ற உணவுப் பொருட்கள் குறிப்பாக தரமற்ற அசைவ உணவுகளை பறிமுதல் செய்வதோடு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் ஆய்வாளர் தங்கவேல் ஆகிய தலைமையிலான அதிகாரிகள் குழு திடீரென திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள சாலையோர இறைச்சி மற்றும் மீன் கடைகளில் அதிரடி சோதனை செய்தனர். இந்த ஆய்வில் பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன பிராய்லர் கோழிகளை வாங்கிவந்து செயற்கையாக நிறங்களைப் பூசி நாட்டுகோழி என விற்பனை செய்தது தெரியவந்தது. மோசடியில் ஈடுபட்டு விற்பனை செய்தது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பெண்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கோழி இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. அவர்களை கடுமையாக எச்சரித்து நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள் எவ்வாறு தரமான முறையில் இறைச்சிகளை வாங்க வேண்டும் என அங்கிருந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.