இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் கரோனாவின் பரவல் அதிகமாக இருக்கிற காரணத்தினால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் மக்களின் அசாதரண போக்கும், நோய் தாக்கத்தின் பரவலும் அதிகரித்ததை அடுத்து தளர்வுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது.
அதன்படி திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், பெரிய வணிக வளாகங்கள், பார்கள், பெரிய கடைகள் ஆகியவை இயக்க அனுமதி இல்லை. மேலும் ஹோட்டல், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மற்றும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் இன்று முதல் மக்கள் அதிகம் கூடும் சினிமா திரையரங்கங்கள், மால்கள், முடிதிருத்தம் அழகு நிலையங்கள், பெரிய கடைகள் போன்ற பகுதிகள் மறு தேதி அறிவிக்கும் வரை மூடப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதனையொட்டி சென்னையில் உள்ள மேற்கண்ட அனைத்தும் இன்று முதல் மூடப்பட்டது.