தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற போதை பொருட்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்துவருகிறார்கள். தடை செய்யப்பட்ட பொருட்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும், அபராதமும் விதிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் திருச்சி நந்திக்கோயில் பகுதியில் இயங்கிவந்த ஒரு கடையில் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அவரது கடை மற்றும் வீட்டில் 128 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன.
மேலும், அவர் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, கடந்த 10ஆம் தேதியன்று நடந்த ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது. அதே போல் 10.12.2021 அன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில் அவசர தடையாணை உத்தரவு வழங்கி இன்று கடை சீல் செய்யப்பட்டது.