வேலூர் அருகே சதுப்பேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரிய அகமேடு கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரக் கூறி பலமுறை இப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்களை சுத்தப்படுத்தி கழிவுநீர் கால்வாய் அமைக்க கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் தகவல் அறிந்து வந்து பொதுமக்களிடையே உடனடியாக அப்பகுதியில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஏற்பாடு செய்கிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்தியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.