
திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படும் சம்பவத்தில் அங்கு வந்த திருச்சி மேயருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி உறையூர் 19 ஆவது வார்டு பகுதியில் கடந்த கடந்த சில தினங்களாகவே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கு வாந்தி பேதி ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 90 வயதான மூதாட்டி மங்கம்மாள் என்பவரும் லதா என்ற பெண்ணும், பிரியங்கா என்ற நான்கு வயது சிறுமியும் உயிரிழந்த தகவல்கள் வெளியாகியது,
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். ஆனால் அங்கு வந்த உறையூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை அப்புறப்படுத்தினர். அதேநேரம் அந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இறந்த குழந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திருச்சி மாநகர மேயர் அன்பழகன் இன்று வந்திருந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் இந்த இறப்பிற்கு காரணம் குடிநீரில் கழிவுநீர் கலந்த தான் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர் முன்னையே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.