Skip to main content

சேலத்தில் மளிகை கடையில் ரகசிய அறை அமைத்து குட்கா பதுக்கல்; அதிகாரிகள் அதிரடி 

Published on 27/09/2018 | Edited on 27/09/2018
foo

 

சேலத்தில் மளிகை கடையில் ரகசிய அறை அமைத்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் குட்கா மற்றும் புகையிலை பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
 

குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள், ஹான்ஸ், பான்பராக் போன்ற போதை வஸ்துகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் புகையிலை பொருள்கள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலும் வடமாநில கும்பலே அதிகளவில் கல்லா கட்டி வருகின்றன.


இந்நிலையில், சேலம் தாதகாப்பட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் குட்கா பொட்டலங்கள் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மளிகை கடையில் செப். 26ம் தேதி சோதனை நடத்தினர்.


மளிகை கடையின் மேல்புறத்தில் ரகசிய அறை அமைத்து, அதில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கடையை பூட்டி 'சீல்' வைத்தனர். கடை உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.


''புகையிலை பொருள்களை மொத்தமாக கிடங்குகளில் பதுக்கி வைத்திருந்தால் சிக்கிக் கொள்வோம் என்று கருதி, ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக பதுக்கி வைத்து நூதனமுறையில் வியாபாரம் செய்கின்றனர். சேலத்திற்கு பெரும்பாலும் பெங்களூரில் இருந்துதான் புகையிலை பொருள்கள் கடத்தி வரப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

சார்ந்த செய்திகள்