பெண் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது உள்ள புகார்கள் குறித்து கல்வித்துறை இயக்குநரக அதிகாரி தனி இடத்தில் வைத்து ரகசியமாக விசாரணை செய்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டவர் வனஜா. அவர் வந்தபிறகு அதிரடியாக பல தனியார் பள்ளிகளுக்கு விரைவான அனுமதிகள் கிடைத்தது. அதேபோல ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையில் உள்ளவர்கள் மீது சஸ்பென்ட் நடவடிக்கை எடுத்தார்.
ஆலங்குடி தி.மு.க. எம்.எல்.ஏ மெய்யநாதன் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து விலையில்லா சைக்கிள்களை மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு தன்னை அவதூறாக பேசினார் என்று கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அரசு பள்ளிகளுக்கு புத்தகம் வாங்கியதில் முறைகேடு நடந்ததால பல ஆசிரியர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள். ஆளுங்கட்சியின் அரவணைப்பி்ல் இருப்பதுபோல தன்னை காட்டிக் கொண்டு கல்வித்துறை அரசு விழாக்களுக்கு கூட தனியார் பள்ளிகளை நடத்தச் சொல்கிறார் என்றும் இவர் மீது புகார் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பணி நிறைவு பெற்றபோது அந்த இடத்தில் மூப்பு அடிப்படையில் உள்ள தலைமை ஆசிரியர்களை கல்வித்துறையில் பரிந்துரை செய்ததில் தகுதியில்லாதவரின் பெயரை முதலில் வைத்து பட்டியல் கொடுத்ததுடன் அவரை டி.ஈ.ஓ.வாக பணியும் வழங்க காரணமாக இருந்தார். அந்த குற்றச்சாட்டு எழுந்ததும் பணியிடத்தில் அந்த பொறுப்பு ஏற்றவர் பணி பறிக்கப்பட்டது. இப்படி பல புகார்கள் கல்வித்துறைக்கு போனது.
இந்த நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா அடுத்த மாதம் பணி நிறைவு பெற உள்ள நிலையில் அவர்மீது உள்ள புகார்கள் குறித்து கல்வித்துறை இயக்குநரகம் திடீரென விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதன்மைக் கல்வி அலுவலரிடம் பள்ளி தொகுதிகள் இணை இயக்குநர் நாகராஜ் முருகன் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து ரகசியமாக விசாரணை செய்து வருகிறார். அங்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, புதுக்கோட்டை, இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர்களும் உள்ளனர்.