வாழப்பாடி அருகே, காதல் கணவரை கட்டையால் அடித்துக் கொன்றதாக அரசுப் பள்ளி ஆசிரியையைக் காவல்துறையினர் கைது செய்தனர். மனைவியின் ஆண் நண்பருடனான தொடர்பைக் கண்டித்ததால் கணவர் கொல்லப்பட்டாரா? குடிபோதையில் டார்ச்சர் செய்ததால் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்துவருகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவருடைய மனைவி இளமதி (30). இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது காதலித்த இவர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு 10 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இளமதி, வி.மன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவந்தார். மணிகண்டன் எம்.பில்., முடித்துவிட்டு, சென்னையில் உள்ள பூம்புகார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அங்கு ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு சில இடங்களில் வேலைக்கு முயற்சித்தும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், நாளடையில் மது போதைக்கு அடிமையானார். ஒரு கட்டத்தில் வேறு வேலை தேடும் முயற்சியைக் கைவிட்ட மணிகண்டன், மது குடித்துவிட்டு போதையில் மனைவி, குழந்தைகளிடம் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்த நிலையில் ஆக. 1ஆம் தேதி மாலையில், போதை தலைக்கேறிய நிலையில் மணிகண்டன் வீட்டுக்கு வந்தார். மனைவியிடம் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கவும் முயன்றார். கணவரிடம் அன்றாடம் தொல்லைகளை அனுபவித்துவந்த இளமதி, ஒருகட்டத்தில் பொறுமை இழந்தார். வீட்டிலிருந்த விறகு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினார். தலையில் பலத்தக் காயமடைந்த மணிகண்டன், ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தகராறை விலக்குவதற்குள் எல்லாமே முடிந்து போயிருந்தது. இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்; ஆசிரியர் இளமதியையும் கைது செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, மணிகண்டனின் உறவினர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை (ஆக. 2) வாழப்பாடி - பேளூர் சாலையில் அத்தனூர்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். கொலையான மணிகண்டனின் தந்தை சித்தன் கூறுகையில், “இளமதிக்கு மன்னார்பாளையத்தைச் சேர்ந்த ஒருவருடன் தவறான தொடர்பு இருந்துவந்தது. அவர் மணிகண்டன் வீட்டில் இல்லாதபோது இளமதியை அடிக்கடி வந்து சந்தித்துவிட்டுச் செல்கிறார். இதனால்தான் என் மகனுக்கும், மருமகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. மணிகண்டனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு, அவரை எப்போதும் இளமதி போதையிலேயே வைத்திருந்தார்.
இந்நிலையில்தான், சம்பவம் நடந்த அன்றும் இளமதியின் ஆண் நண்பர் அவரைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். அதையறிந்த மணிகண்டன் குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இளமதியும், அவருடைய ஆண் நண்பரும் சேர்ந்து என் மகனை அடித்துக் கொன்றுவிட்டனர். கொலைக்கு உடந்தையாக இருந்த இளமதியின் ஆண் நண்பரையும் கைது செய்ய வேண்டும்” என்றார். வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டோரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இளமதியின் ஆண் நண்பர் சகவாசத்தைத் தட்டிக்கேட்டதால் மணிகண்டன் கொல்லப்பட்டாரா? அல்லது அவர் குடிபோதையில் தினமும் டார்ச்சர் செய்ததால் கொல்லப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்துவருகிறது.