பள்ளிக்காலம் முதல் கல்லூரி காலம் வரை மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் அதிகாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி படித்து வரும் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுமியாக இருந்தபொழுது காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாண்டியராஜனுடன் மாணவின் தாயாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட தொடர்பை சாதகமாக்கிக் கொண்டு மாணவியின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி 13 வயது சிறுமியாக இருந்த மாணவியை காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் பலவந்தப்படுத்தி மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக மாணவியின் தாயார் பாண்டியராஜனை விட்டு வேறு ஒரு இடத்தில் வசித்து வரும் நிலையில், தனியார் கல்லூரியில் தற்பொழுது அந்த மாணவி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். சமீபத்தில் கல்லூரி வாயிலுக்கு வந்து மாணவியை சந்தித்த உதவி காவல் ஆய்வாளர் பாண்டியராஜன் 'சிறுமியாக இருந்ததை விட தற்பொழுது அழகாக இருப்பதாக' கூறி மாணவியிடம் பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு சிறுமியாக இருந்த பொழுது பதிவு செய்யப்பட்ட புகைப்படம், வீடியோக்களை வைத்து மிரட்டி தன்னுடன் மீண்டும் வரவேண்டும், இல்லையெனில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மாணவி காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்ட வில்லிவாக்கம் மகளிர் போலீசார் சம்பந்தப்பட்ட பாண்டியராஜனை நேரில் விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி சிறுமியாக இருந்தபோதிலிருந்து தற்போது வரை பலமுறை மிரட்டி வன்கொடுமையில் ஈடுபட்டதை உறுதி செய்த பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உதவி காவல் ஆய்வாளர் பாண்டியராஜனை கைது செய்தனர்.