Skip to main content

சேலம்: வீடு வீடாக கரோனா கணக்கெடுப்பு - தீவிர களப்பணி!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
Salem Corporation

 

 

சேலத்தில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் நேரடியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் 225 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, புறநகர் பகுதிகளைக் காட்டிலும், மாநகர பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நோய்ப்பரவலை துல்லியமாக கண்டறியும் நோக்கில், குடியிருப்புகளுக்கே நேரில் சென்று காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், இருதய பாதிப்பு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்கள், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பியோர் என ஒட்டுமொத்த விவரங்களையும் சேகரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

 

அதன்படி, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 கோட்டங்களிலும் உள்ள 2.34 லட்சம் குடியிருப்புகளுக்கும் களப்பணியாளர்கள் மூலம் நேரடியாக சென்று விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மாநகர பகுதிகளில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

 

ஜூலை 2ம் தேதி முதல் 29ம் தேதி வரை மொத்தம் 9.39 லட்சம் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இக்கணக்கெடுப்பின்போது சளி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல், வறட்டு இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள 4,661 நபர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 225 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 152 பேர் குணமடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், அனைத்து குடியிருப்புகளிலும் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கணக்கெடுக்க வரும் களப்பணியாளர்களிடம், பொதுமக்கள் மேற்கண்ட விவரங்களை விடுதலின்றி தெரிவித்து, ஒத்துழைக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டுள்ளது சேலம் மாநகராட்சி.

 

மேலும், குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் கரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் இருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்