minister sekar babu vist about thiruvannamalai deepam 2022

2022 ஆம் ஆண்டுக்கான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா நவம்பர் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6 ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது.

Advertisment

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் அனுமதிக்கப்படாத தீபத்திருவிழாவாக பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இந்தாண்டு திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தோராயமாக 40 லட்சம் பக்தர்கள் தீபத்திருவிழாவைக் காண வருவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அப்படி வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனை மற்றும்கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில், நவம்பர் 15 ஆம் தேதி இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்ட தீபத்திருவிழா ஆலோசனைக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைச்சரான பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் பிரதிநிதிகள், அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில்கருத்துதெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, “வி.ஐ.பி.கள் வருகையின் போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில்மற்றவர்கள் அமர்ந்து விடுகிறார்கள்.அது நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காலை முதல் வேலை பார்க்கும் காவலர்கள் தீபம் மலையில் ஏற்றி முடித்ததும், போதும் என சோர்ந்து விடுகிறார்கள். இதனால் வாகனங்கள் செல்வதும், போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுகின்றன. அது நடக்காமல் காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும். அம்மனியம்மன் கோபுரம், பேகோபுரம், ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் உள்ளே வருகிறார்கள். இங்கே டிக்கட் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என எல்லோரும் குவிவதால் நெரிசல் ஏற்படுகிறது. அதனால் அதனை ஒழுங்குபடுத்த வரிசை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

“கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 15 மருத்துவக்குழுக்கள் செயல்படும் எனச் சொல்லியுள்ளார்கள். 40 லட்சம் பக்தர்கள் வரும் விழாவிற்கு 15 பத்தாது, 100 மருத்துவக்குழுக்கள் உருவாக்குங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன்னதாக அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர், இயக்குநர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோவில் பிரகாரத்தில் ஆய்வு செய்தார். 5 ஆம் பிரகாரத்தில் உள்ள கோசாலையைப் பார்வையிட்டார். கோவில் வளாகத்தில் உள்ள கோசாலையின்நிலையைப் பார்த்து அமைச்சர் அதிருப்தியானார். அது குறித்து சில உத்தரவுகளை கோவில் நிர்வாகத்துக்கு பிறப்பித்தார். அதன் பின்னர்கிரிவலப்பாதையில் ஆய்வு செய்தார்.