ஏற்காட்டில், திருமணமான ஐந்தே வருடத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, கணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு கோயில் மேட்டைச் சேர்ந்தவர் டேவிட். இவருடைய மகன் செல்வக்குமார் (25). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கரிஷ்மா. இவர்கள் இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ஜூலை 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் செல்வக்குமாரின் குடும்பத்தினர் கரிஷ்மாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி அவரை, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சேர்த்த சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இந்நிலையில், கரிஷ்மாவின் பெற்றோர் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக காவல்துறையில் புகார் அளித்தனர். அவருடைய தம்பி நவாஸ் தலைமையில் உறவினர்கள் திங்கள்கிழமை (ஜூலை 15) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடக்கும் என்பதால், ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க ஏராளமான பொதுமக்களும் வந்திருந்தனர். இந்த நிலையில் கரிஷ்மாவின் உறவினர்களும் அங்கே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறை உதவி ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து போகுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணமாகி 7 ஆண்டுக்குள் கரிஷ்மா மரணம் அடைந்திருப்பதால் இதுகுறித்து கோட்டாட்சியர் நேரடியாக விசாரணை நடத்துவார் எனக்கூறியதை அடுத்து அவர்கள் சமாதானம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கரிஷ்மாவின் உறவினர்கள் கூறுகையில், ''செல்வக்குமார் தினமும் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்து கரிஷ்மாவிடம் தகராறு செய்வார். செல்வக்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் தவறான தொடர்பு உள்ளது.
இது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, கரிஷ்மாவின் தாத்தா இறந்துவிட்டார். அப்போது ஈமச்சடங்கிற்காக வந்தபோது கணவருடன் ஏற்பட்டு வரும் தகராறு குறித்து கரிஷ்மா எங்களிடம் அழுது புலம்பினார். கரிஷ்மாவை, செல்வக்குமார் அடித்தே கொன்றுவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கரிஷ்மாவின் சடலத்தை வாங்க மாட்டோம்,'' என்றனர்.