ஆத்தூர் அருகே, ஜவ்வரிசி ஆலையில் எரிவாயு தயாரிக்கும் தொட்டியில் இறங்கியபோது விஷ வாயு தாக்கியதில் இரண்டு தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவபுரத்தைச் சேர்ந்தவர் ரவி என்கிற தர்மலிங்கம். அப்பகுதியில் சொந்தமாக ஜவ்வரிசி ஆலை (சேகோ) நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ளூரைச் சேர்ந்த 15- க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இதே ஆலையில் சதாசிவபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்தி (23), அவருடைய உறவினர் ஆறுமுகம் (43) ஆகிய இருவரும் வேலை செய்து வந்தனர். இந்த ஆலைக் கழிவில் இருந்து எரிவாயு தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், எரிவாயு தொட்டியில் காற்று அடைப்பு ஏற்பட்டதால், வாயு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை (ஏப். 11) காலை எரிவாயு தொட்டியில் ஏற்பட்ட காற்று அடைப்பை சரி செய்வதற்காக கார்த்தி அந்த தொட்டிக்குள் இறங்கினார்.
அந்த தொட்டியில் இருந்து கிளம்பிய விஷ வாயுவால் கார்த்திக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைப் பார்த்த ஆறுமுகம், அவரைக் காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் குதித்தார். அவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் அதே தொட்டிக்குள் மயங்கி விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேரமாகியும் கார்த்தியும், ஆறுமுகமும் வராததால் சந்தேகம் அடைந்த ஆலை ஊழியர்கள் எரிவாயு தொட்டிக்குள் பார்த்தனர். இருவரும் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து ஆத்தூர் ஊரக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலங்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், தொழிற்சாலைகள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், உத்தரவை மீறி சட்ட விரோதமாக இயங்கிய ஜவ்வரிசி ஆலையில் விஷ வாயு தாக்கி இருவர் பரிதாபமாக இறந்துள்ளனர். ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி, இதேபோல ஒரு ஜவ்வரிசி ஆலையில் விஷ வாயு தாக்கி மணி என்கிற ஜெயச்சந்திரன் (35) என்ற தொழிலாளி உயிரிழந்தார். அந்த சம்பவத்தில் மேலும் நான்கு பேர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். அச்சம்பவம் நடந்த ஐந்தே மாதத்தில் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் விஷ வாயு தாக்கியதில் மேலும் இருவர் பலியாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.