Skip to main content

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டிய மனைவி! வீட்டுக்குள்ளேயே சடலம் புதைப்பு; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

salem rajagiri house

 

தவறான தொடர்பில் உள்ள ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனின் கழுத்தை நெரித்துத் தீர்த்துக்கட்டிய மனைவி, சடலத்தைக் கழிவு நீரோடை அருகே குழி தோண்டி புதைத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் கந்தம்பட்டி செஞ்சிக்கோட்டையைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற ராஜகிரி (45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி (37). இவர்களுக்கு பிளஸ்1 படிக்கும் வயதில் ஒரு மகளும், 9ஆம் வகுப்புப் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். 

 

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ராஜகிரியை விட்டு பூங்கொடி தனியாக பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மகள், மகன் இருவரையும் ராஜகிரி தனியாக வளர்த்து வந்தார் என்றாலும், அவ்வப்போது பூங்கொடி பிள்ளைகளை நேரில் வந்து பார்த்துச் சென்றுள்ளார்.

 

இந்நிலையில், தன் மகள் 'பெரியவளாகி' விட்டாள் என்பதை அறிந்த பூங்கொடி, நான்கு மாதங்களுக்கு முன் மகள், மகனைக் காண கந்தம்பட்டிக்கு வந்தார். மகளுக்காக தான் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். ராஜகிரியும், மனைவியின் தவறை மன்னித்து ஏற்றுக்கொண்டதை அடுத்து, இருவரும் குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

 

இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி, கணவர் ராஜகிரி வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். மேலும், ஜூன் 16ஆம் தேதி, தன் பிள்ளைகள் இருவரிடமும் தலா 200 ரூபாயைக் கொடுத்து கைச்செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, தானும் வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். அதன்பின் பூங்கொடியும் எங்குச் சென்றார் எனத் தெரியவில்லை.


ராஜகிரியின் தம்பி ராஜேந்திரன் என்பவரும் அதே பகுதியில்தான் வசித்து வருகிறார். வெளியூர் சென்றதாகச் சொல்லப்பட்ட அண்ணனிடம் இருந்தும் எந்தத் தகவலும் இல்லை; அண்ணியையும் காணவில்லை என்பதால் சந்தேகம் அடைந்தார். அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, இருவரின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

 

இதையடுத்து ராஜேந்திரன், தனது அண்ணனும், அண்ணியும் காணவில்லை என்று சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் காவலர்கள் ராஜகிரியின் வீட்டிற்குச் சென்று நேரில் விசாரித்தனர். அப்பகுதி மக்களும் ராஜகிரியின் வீட்டுப் பின்பக்கத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கூறியதால் அந்த இடத்தையும் பார்வையிட்டனர்.

 

அங்கே சென்று பார்த்தபோது, பழைய பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கே ரத்தக்கறைகள் மண்ணில் படிந்திருந்தன. குழி தோண்டப்பட்டதற்கான தடயமும் இருந்தது. இதனால், ராஜகிரியைக் கொன்று சடலத்தை அங்கே புதைத்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் முன்னிலையில் வியாழக்கிழமை (ஜூன் 25) சந்தேகத்திற்குரிய இடம் தோண்டப்பட்டது. அங்கே அழுகி, சிதைந்த நிலையில் ராஜகிரியின் சடலம் கிடந்தது. சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

கணவன், பிள்ளைகளைப் பிரிந்து பத்தாண்டுகள் கழித்து மீண்டும் பூங்கொடி வீடு திரும்பியதும், திடீரென்று அவர் தலைமறைவாகிவிட்டதும் காவல்துறைக்கு பூங்கொடி மீது பலத்த சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே, பூங்கொடியைத் தேடி, அவருடைய சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் பெரும்பாலைக்கு காவல்துறையினர் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

 

பூங்கொடி, சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளத்தில் தனது ஆண் நண்பரான புருஷோத்தமன் என்பவர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

 

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சோளம்பள்ளம் புருஷோத்தமனுடன் பூங்கொடிக்கு தகாத உறவு இருந்து வந்தது. அதனால்தான் கணவன், பிள்ளைகளை விட்டு பத்தாண்டுக்கு முன்பு பிரிந்து சென்றதும், அதன்பின் புருஷோத்தமனுடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில்தான், நான்கு மாதங்களுக்கு முன்பு மனம் திருந்திவிட்டதாகக் கூறி, கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

 

அப்போதும் அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஜூன் 8ஆம் தேதியன்று, பிள்ளைகள் இருவரும் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றுவிட்டனர். அப்போது கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த புருஷோத்தமன், அங்கு வந்துள்ளார். அப்போது பூங்கொடி, 'அவன் ஒழிந்தால்தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்' என்று அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து பூங்கொடியும், புருஷோத்தமனும் ராஜகிரியைக் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். 

 

கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் சடலத்தை வெளியே சென்று புதைப்பதில் சிக்கல் ஏற்படும் எனத் திட்டம் போட்ட அவர்கள், வீட்டுக்குப் பின்பக்கத்தில் குழிதோண்டி சடலத்தைப் புதைத்துவிட முடிவு செய்தனர். அதன்படியே இரவோடு இரவாக ராஜகிரியின் சடலத்தை, குழி தோண்டி புதைத்துள்ளனர். இதுகுறித்து யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக பூங்கொடியும் அதே வீட்டில் பத்து நாள்களாக இருந்துள்ளார்.

 

http://onelink.to/nknapp

 

வெளியே சென்று வீடு திரும்பிய குழந்தைகள் அப்பா எங்கே கேட்டபோதும், வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறி நம்ப வைத்திருக்கிறார். அதன்பிறகு, ஜூன் 18ஆம் தேதி, பூங்கொடியும் வெளியூர் செல்வதாக தன் பிள்ளைகளிடம் பொய்ச் சொல்லிவிட்டு, அந்த வீட்டில் இருந்து கிளம்பி புருஷோத்தமன் வீட்டுக்குச் சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. 

 

தவறான தொடர்பு வைத்திருந்த ஆணுடன் சேர்ந்து மனைவியே கணவனை தீர்த்துக்கட்டியதுடன், சடலத்தை வீட்டுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்த சம்பவம் கந்தம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்