சேலத்தில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அருகே உள்ள செல்லியம்பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் மோகன்ராஜ் (42). ஆட்டோ ஓட்டுநர். மகுடஞ்சாவடி ஆட்டோ ஸ்டேண்டில் இருந்து காகாபாளையம், இளம்பிள்ளை பகுதிகளில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
அவருடைய ஆட்டோவில் சவாரிக்கு வரும் கணவரை பிரிந்து வாழும் பெண்கள், வறுமையில் வாடும் பெண்களை குறிவைத்து அவர்களிடம் பேச்சுக்கொடுத்து வலையில் வீழ்த்திய மோகன்ராஜ், அவர்களில் சிலரை தன் வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்புணர்வு செய்தார்.
மேலும், பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் பெண்கள் சிலருடன் அடிக்கடி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகார்களின் பேரில், கொண்டலாம்பட்டி காவல்துறையினர் மோகன்ராஜை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு முன்பே, மகுடஞ்சாவடி காவல்துறையினர் மோகன்ராஜ் மீது, ஒருவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
மேலும், மோகன்ராஜ் எடுத்த வீடியோ காட்சிகளை, அவருடைய நண்பரான செல்லியம்பாளையத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் மணிகண்டன் (22) என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரோ, அந்த வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், வேடுகாத்தாம்பட்டி சமுதாயக்கூடம் அருகே, முருகன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அவரிடம் இருந்த அரை பவுன் மோதிரத்தை பறித்துக்கொண்டு ஓடியதாகவும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மோகன்ராஜ், மணிகண்டன் ஆகியோரால் பல பெண்கள், அவர்களுடன் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதற்கான கைது ஆணை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் காவல்துறையினர் நவ. 22ம் தேதி, நேரில் விசாரணை செய்தனர்.