மத்திய உருக்குத்துறை இணை அமைச்சர் பக்கன்சிங் குலாஸ்தே, ஞாயிற்றுக்கிழமை (டிச.6) சேலம் வந்தார். அம்பேத்கரின் 64வது நினைவு தினத்தையொட்டி, சேலத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“தமிழ்நாட்டில் அம்பேத்கரின் புகழ் பரவி கிடக்கிறது. அவர் இயற்றிய அரசியலமைப்பு சட்டம், அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. டெல்லியில் அம்பேத்கர் வசித்த இல்லம், நினைவு இல்லமாக மாற்றி அனைவரும் பார்க்கும் வகையில் பா.ஜ.க. அரசு செய்துள்ளது.
சேலம் இரும்பாலை தனியார்மயம் தொடர்பாக இப்போது எந்த கருத்தையும் கூற முடியாது. இது தொடர்பாக எந்த முடிவும் இப்போது எடுக்கவில்லை. அதேநேரம், இரும்பாலையில் பணியாற்றும் எந்த ஒரு தொழிலாளர்களுக்கும் பாதிப்பு வராது என்பதை மட்டும் உறுதியாக கூறுகிறேன்.
சேலம் இரும்பாலையை லாபகரமாக இயக்குவது, அதை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளவே வந்திருக்கிறேன். இவ்வாறு பக்கன்சிங் குலாஸ்தே கூறினார்.
பா.ஜ.க. நிர்வாகிகள் சிவகாமி பரமசிவம், சுரேஷ்பாபு, சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.