எட்டுவழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் சேலம் திமுக பிரமுகரை, உளவுப்பிரிவு காவல்துறையினர் மூலம் மிரட்டும் போக்கில் ஆளுங்கட்சி ஈடுபட்டுள்ள பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவர், திமுகவில் அயோத்தியாப்பட்டண ஒன்றிய செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வந்த அவர், தற்போது கிழக்கு மாவட்ட திமுகவில் அவ்வொன்றியத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். செவ்வாய் க்கிழமை (நவ. 12, 2019) மாலை 4.30 மணியளவில், வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று இரண்டு கார்களில் வந்த, நேர்த்தியாக உடை அணிந்த மர்ம நபர்கள் சிலர், அவரிடம் ஏதோ ரகசியமாக பேசினர். பின்னர் மர்ம நபர்கள் வந்த கார் ஒன்றில் விஜயகுமாரை ஏறும்படி அதிகார தொனியில் கூறியுள்ளனர். விஜயகுமாரை மர்ம நபர்கள் காரில் கடத்திச் செல்வதாக தகவல் கிடைக்க, அவருடைய மனைவி ஹேமலதா அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எதற்காக கணவரை அழைத்துச் சென்றார்கள்? என்ற விவரங்கள் எதுவும் கிடைக்காததால் பதற்றம் அடைந்த அவர், இதுபற்றி உறவினர்கள், திமுகவினர் சிலருக்கும் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அவர்கள், சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கணவரை மர்ம நபர்கள் கடத்திச்சென்று விட்டதாக அப்போது காவல்நிலையத்தில் கூறினார். திமுகவினர் அங்கே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த உயரதிகாரிகள் அங்கு வந்தனர். அப்போது அவர்கள், ''கியூ பிரிவு காவல்துறையினர் உங்கள் கணவரை விசாரணக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை முடிந்ததும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்,'' என்று கூறி முற்றுகை போராட்டத்தை கைவிடுமாறு சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதேநேரம் நாம் கியூ பிரிவு காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, அண்மையில் கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் செல்போனில் விஜயகுமாரின் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டு இருந்ததாகவும், அதனால் அவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரிப்பதாகவும் கூறினர். இதே தகவலைத்தான் அனைத்து ஊடகங்களுக்கும் கியூ பிரிவு தரப்பிலிருந்து கசிய விடப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில் இருந்து கசிய விடப்பட்ட தகவலை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள, நாம் கியூ பிரிவு ஆய்வாளர் கோகிலாவிடமும் பேசினோம். அப்போது அவரோ, ''செல்போன் நம்பர்கள் எல்லாம் விசாரித்து வருகிறோம். மாவோயிஸம் தொடர்பாகத்தான் விசாரிக்கிறோம். விஜயகுமாரிடம் விசாரணை முடிந்த பிறகு அவரை வீட்டுக்கு அனுப்பி விடுவோம்,'' என்று சொன்னார்.
இதற்கிடையே, இரவு 10 மணியளவில் விஜயகுமார், எப்படி சென்றாரோ அப்படியே வீடு திரும்பினார். அவரைப் பார்த்தபிறகுதான் குடும்பத்தினரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நடந்த சம்பவம் குறித்து, நள்ளிரவு கடந்து 1.05 மணியளவில் விஜயகுமாரிடமும் பேசினோம். கியூ பிரிவின் சூழ்ச்சி, ஆளுங்கட்சியின் உள்நோக்கம் பற்றியெல்லாம் அறிந்து கொந்தளித்தார். அவர் நம்மிடம், ''என் வீடு அருகில்தான் நோட்ரி டேம் பள்ளி உள்ளது. அந்தப்பள்ளிக்கு தட வழிக்காக இடம் தேவைப்படுவது குறித்து ஏற்கனவே சொல்லி இருந்ததால், பள்ளிக்குச் சென்றுவிட்டு வெளியே வந்தேன். அப்போது மாலை 5 மணி இருக்கும். திடீரென்று இரண்டு கார்களில் சிலர் வந்திறங்கினர். அப்போது அவர்களை யாரென்றே எனக்குத் தெரியாது. கார்களும் காவல்துறைக்குச் சம்பந்தமானது இல்லை. காலையில் இருந்தே என்னை அவர்கள் ரகசியமாக கண்காணித்து வந்திருப்பார்கள் என்றும் கருதுகிறேன்.
ஏதோ விசாரிக்க வேண்டும் என்று கூறிவிட்டு என்னை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். காருக்குள் அமர்ந்ததும் என்னிடம், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக மக்களை திரட்டிக்கொண்டு நாளைக்கு (அதாவது, நவ. 13ம் தேதி, புதன்கிழமை) நீங்கள் சென்னைக்கு செல்கிறீர்களா? என்று கேட்டனர். அப்படி எல்லாம் இல்லை என்று கூறினேன். ஆனாலும் விடாமல் எட்டுவழிச்சாலைத் திட்டம் தொடர்பாகவே என்னிடம் வளைத்து வளைத்து விசாரித்தனர்.
காரை அவர்கள் எந்த இடத்திலும் நிறுத்தாமலேயே என்னிடம் துருவி துருவி விசாரித்தனர். ஆத்தூரில் உள்ள ரமா ஹோட்டலில்தான் கடைசியாக காரை நிறுத்தினர். விசாரணை முடிந்து இரவு 10 மணிக்கு வீடு திரும்பினேன்.
ஏற்கனவே நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் இழப்பீடு தொகை முழுமையாக கொடுக்கப்படவில்லை. அதனால்தான் மக்களுக்கு ஆளுங்கட்சி மீது நம்பிக்கை ஏற்படவில்லை. எத்தனை கோடி கொடுத்தாலும் எட்டுவழிச்சாலைக்கு மக்கள் நிலம் கொடுக்கத் தயாராக இல்லை.
நான் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் மூன்று முறை தலைவராக இருந்திருக்கிறேன். கடைசியாக நடந்த மக்களவை தேர்தலில்கூட, மாநில அளவில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில்தான் திமுகவுக்கு 40 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுக் கொடுத்திருக்கிறேன். அதனால் உள்ளாட்சித் தேர்தலின்போது ஆளுங்கட்சிக்கு நான் இருப்பது இடைஞ்சலாக இருப்பதாக கருதுகின்றனர். அதற்காகவே என்னை எப்படியாவது எதிலாவது சிக்க வைக்க வேண்டும் என்று இப்படி கியூ பிராஞ்ச், போலீசாரை வைத்து ஆளுங்கட்சியினர் மிரட்டிப் பணியவைக்கப் பார்க்கின்றனர்.
ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு காவல்துறை துணை போகிறது. காவல்துறையினர் காரில் என் இடத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக என் மீது கியூ பிரிவு காவல்துறையினர் அவதூறு பரப்புகின்றனர். விசாரணை முடியும்வரை என்னுடைய இரண்டு செல்போன்களும் போலீசாரிடம்தான் இருந்தன. காவல்துறை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் என் இரு செல்போன்களையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்,'' என்றார் விஜயகுமார்.
எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிர்ச்சி அளிக்கும் ஆதாரங்களை இன்று (நவ. 13) காலை 11 மணிக்கு, சென்னை பத்திரிகையாளர்கள் அரங்கத்தில் வெளியிடுவதாக வாட்ஸ்அப் குழுக்களில் உலாவ விட்டுள்ளனர். அதையொட்டியே, விஜயகுமாரிடம் கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
விசாரணை முடிந்து விஜயகுமாரிடம் ஒரு ஸ்டேட்மென்ட்டில், கையெழுத்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் கியூ பிரிவினர். உள்ளாட்சித் தேர்தல் தொடங்கும் முன்பே சிம்மசொப்பனமாக இருக்கும் திமுக பிரமுகர்களை போலீசார் மூலம் ஒடுக்கத் தொடங்கிவிட்டது ஆளுங்கட்சி.