Skip to main content

திமுக மூத்த தலைவர் 'மிசா' மாரியப்பன் மறைவு!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

 

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் 'மிசா' மாரியப்பன் (95). சேலம் நகராட்சியாக இருந்தபோது 25 ஆண்டுகள் நகர்மன்ற உறுப்பினராகவும், சேலம் நகர திமுக முன்னாள் செயலாளராகவும் இருந்துள்ளார்.

 

சேலம் மாவட்டத்தில் திமுகவை வளர்த்தெடுத்த தளகர்த்தர்களுள் ஒருவராகவும் விளங்கினார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர்.

 

வயது மூப்பு காரணமாக கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (ஏப். 24) காலையில் 'மிசா' மாரியப்பன் உயிரிழந்தார்.

 

இந்தியாவில் அவசர நிலை சட்டம் (மிசா) அமலில் இருந்தபோது கைது செய்யப்பட்ட திமுக முன்னோடிகளுள் இவரும் ஒருவர். அப்போது ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருடைய மனைவி கமலாம்மாள் இயற்கை எய்தினார். அதற்காக பரோலில் வெளியே வந்த அவர் மனைவிக்கு இறுதிச் சடங்குகளை செய்து விட்டு மீண்டும் சிறைக்குச் சென்றார். மிசா சட்டத்தில் கைதானதால் மாரியப்பன் என்ற அவருடைய பெயருக்கு முன்னொட்டாக 'மிசா' என்பதும் சேர்ந்து கொண்டது.

 

அவருடைய உடலுக்கு சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

 

 


 

சார்ந்த செய்திகள்