Skip to main content

கொளத்தூர் அருகே காதல் ஜோடிக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த திவிக பிரமுகர்!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளமதி (23). இவரும், அந்தியூர் அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன் (26) என்பவரும் காதலித்து வந்தனர்.


இவர்களுடைய காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு வீட்டார் தரப்பிலிருந்துமே கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

SALEM DISTRICT KOLLATHTHUR COUPLE POLICE INVESTIGATION

இதையடுத்து, கடந்த இரு நாள்களுக்கு முன்பு காதலர்கள் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடித்தனர். இவர்களுக்கு, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக பிரமுகர் ஈஸ்வரன் என்பவர் அடைக்கலம் கொடுத்தார். அவர் தலைமையேற்று காதலர்களுக்கு சீர்திருத்த முறையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார். 


இதுகுறித்து தகவல் அறிந்த இளமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அடியாள்கள் என முப்பதுக்கும் மேற்பட்டோர் கார்களில் திங்கள்கிழமை (மார்ச் 9) இரவு கொளத்தூர் வந்தனர். ஈஸ்வரன் வீட்டிற்க்குச் சென்று விசாரித்தபோது அங்கு மகளும், அவருடைய காதலனும் இல்லை என்பது தெரிய வந்தது. அதனால் மகள் சென்ற இடம் குறித்து ஈஸ்வரனிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். 


உக்கம் பருத்திக்காட்டில் இளமதியும், செல்வமும் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உக்கம் பருத்திக்காட்டிற்குச் சென்று மகளை மீட்டனர். மேலும், அடைக்கலம் கொடுத்த ஈஸ்வரனையும், செல்வனையும் தனியாக அருகில் உள்ள காவிரி கரைக்கு இழுத்துச்சென்று விசாரித்தனர். அந்த கும்பல் விடிய விடிய அவர்களை காவிரி கரை பகுதியில் சிறை வைத்திருந்துள்ளது.


இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் காவல்துறையினர், செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) காலையில் காவிரி கரை பகுதிக்குச் சென்று அவர்கள் இருவரையும் மீட்டனர். இளமதியின் உறவினர்கள் ஈஸ்வரன், செல்வன் ஆகியோரை கடத்திச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது. காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்