சேலம் மாநகரில் கொலை, கொள்ளை, திருட்டு, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அவ்வப்போது மாநகர காவல்துறையினர், ரவுடிகளை கொத்தாக கைது செய்து உள்ளே தள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக ரவுடிகளை கூண்டோடு கைது செய்யும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மீண்டும் அதுபோன்ற இன்டன்சிவ் ஆபரேஷனில் மாநகர காவல்துறை இறங்கி இருக்கிறது. முதல்கட்டமாக, 109 ரவுடிகளை அடையாளம் கண்டுள்ள காவல்துறை, சனிக்கிழமை (ஜன. 25) ஒரே நாளில் மட்டும் 33 ரவுடிகளை அதிரடியாக கைது செய்துள்ளது.
இவ்வாறு கூண்டோடு அள்ளியதில், காவல்துறைக்கு போக்குக் காட்டிவிட்டு தலைமறைவாக இருந்த பிரபலமான பல ரவுடிகளும் சிக்கியிருக்கிறார்கள்.
அதன்படி, சேலம் நகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ரவுடிகள் துரைசாமி, கார்த்திக், வெள்ளையன் என்கிற பைரோஸ்கான், செவ்வாய்பேட்டை எல்லைக்கு உட்பட்ட கோவிந்தராஜ் என்கிற மெட்ராஸ் கோவிந்தன், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஜான்பாஷா, கோபால் என்கிற நேபால், ஜடேஜா என்கிற தியாகராஜன், சேட்டு என்கிற லட்சுமணன், மோகன் என்கிற பல்லன் மோகன், முரளி என்கிற முரளிதரன், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பாலு என்கிற கருக்கி பாலு, நெப்போலியன், செல்வக்குமார், கார்த்திக் என்கிற காத்தாடி, மணி என்கிற மணிகண்டன் என்கிற குள்ளமணி உள்ளிட்டோர் அடங்குவர்.
தலைமறைவாக உள்ள மற்ற ரவுடிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக யாராவது செயல்படுவதாக தெரிய வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை கொடுக்கப்படும்.
சேலம் மாநகரில் வசிக்கும் மக்களுக்கு ரவுடிகளால் அச்சுறுத்தல் இருப்பின், அதுகுறித்த தகவல்களை மாநகர காவல்துறைக்கு உடனடியாக புகார் அளிக்கலாம் என்று மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.