காதில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற சென்ற சிறுமிக்கு மருத்துவர்கள் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். 5 ஆம் வகுப்பு படித்துவரும் இவரது மகள் ராஜஸ்ரீ (9) சமீப காலமாக காதில் ஏற்பட்ட கட்டி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். காதில் கம்மல் போடும் இடத்தில் ஏற்பட்ட அந்த கட்டியை அகற்றுவதற்காக அரசு உதவிபெறும் மருத்துவமனை ஒன்றில் சிறுமி ராஜஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், இன்று அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள், சிறுமியின் காதில் உள்ள கட்டியை நீக்குவதற்கு பதிலாக, சிறுமியின் தொண்டையில் அறுவைசிகிச்சை செய்து ட்ரான்சில் என்ற பகுதியை தவறுதலாக நீக்கியுள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்து சிறுமியை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் பெற்றோர், உறவினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது வேறொரு சிறுவனுக்கு செய்யப்பட வேண்டிய அறுவைசிகிச்சையை மாற்றி சிறுமிக்கு செய்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.