சேலம் மாவட்டத்தில், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவரை இழந்த பெண்கள், பிள்ளைகளை இழந்த ஆதரவற்றவர்களுக்கு உதவ தனி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு வரும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா நோய்த் தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி, அரசு இல்லங்களில் தங்கி படிப்பதற்கான முன்னுரிமை, பட்டப்படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதி செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்து உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் வசிக்கும் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடையும்வரை மாதந்தோறும் பராமரிப்பு தொகை 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி உடனடியாக வழங்கப்படும்.
இதற்காக சேலம் மாவட்டத்தில் ஊன்றுகோல் என்ற பெயரில் மாவட்ட அளவிலான பணிக்குழு தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை தொடர்புகொண்டு, தங்கள் கோரிக்கைகளை பதிவு செய்யலாம். 9385745857 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமும், postcovid19helpteamslm@gmailcom என்ற மின்னஞ்சல் மூலமும் தகவல்களை அனுப்பலாம். இந்த கட்டுப்பாட்டு அறைக்கு வரும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா தொற்றால் கணவரை இழந்த பெண்கள், குழந்தைகளை இழந்த முதியோர், ஆதரவற்றவர்களுக்கு மாதாந்திர உதவிகள், பாதுகாப்பான தங்குமிடம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். ஊன்றுகோல் என்ற கட்டுப்பாட்டு அறை வசதியை சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.