சேலம் அருகே, கல்லூரி மாணவர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தை அடுத்த நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் திலீப்குமார் (19). நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் படித்து வந்தார். திலீப்குமார் மற்றும் நண்பர்கள் திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகர் சிலை வைத்து கொண்டாடி வந்தனர்.
சில மாதங்களுக்கு முன் நண்பர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு திலீப்குமார் தனியாகவும், திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் தனியாகவும் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். செப்டம்பர் 4ம் தேதி, விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, இளைஞர்கள் பலர் சாலையில் நடனமாடிக் கொண்டே சென்றனர். இதைப்பார்த்த திலீப்குமார், அவருடைய பழைய நண்பர்களான மூவரையும் பார்த்து கிண்டல் செய்துள்ளார்.
மேலும் நேற்று (செப். 5) காலை திருநாவுக்கரசு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திலீப்குமார் அவரிடம் ஏதோ தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து நேற்று மாலை திலீப்குமாரின் வீட்டுக்கு கூட்டாளிகளுடன் சென்ற திருநாவுக்கரசு, அங்கே திலீப்குமார் இல்லாததால் அவருடைய தந்தையை எச்சரித்துவிட்டு வந்தார். அதன்பிறகு இரவு 8 மணியளவில் மீண்டும் சென்ற அவர்கள், திலீப்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பி மற்றும் கத்தியை எடுத்து திலீப்குமாரை தாக்கினர். தப்பிக்க முயன்றபோது விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர். திலீப்குமாரை காப்பாற்ற வந்த அவருடைய நண்பர் சரண் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் திருநாவுக்கரசுவும், அவருடைய நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயம் அடைந்த திலீப்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் புறநகர் டிஎஸ்பி உமாசங்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரித்தனர்.இந்த கொலையில் திருநாவுக்கரசு, சரவணன் மற்றும் சேலம் பச்சப்பட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திலீப்குமாரின் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், அதனால் அவர்களை கைது செய்யாமல் காவல்துறை தவிர்த்து வருவதாகவும்கூறி, உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.