Skip to main content

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் முகவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்! ஆட்சியர் ரோகிணி தகவல்!!

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைததேர்தலும் நடந்தது. மே 19ல் சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
 

rohini

 

 

இந்த தேர்தல்களில் நடந்த வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சேலம் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு வழங்கும் விவிபேட் உபகரணங்கள் ஆகியவை வாக்கு எண்ணிக்கை மையமான கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. மூன்று அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அதிகாரிகள், வேட்பாளர்களின் முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. சேலம் மக்களை தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ரோகிணி ஆலோசனைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


சேலம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் பதிவான வாக்குகள், உதவி தேர்தல் அதிகாரிகள் தலைமையில் எண்ணப்படும். 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒரு சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிவடைந்த பின்னரும், முடிவுகள் குறித்து உதவி தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவிப்பார். அதிகாரிகள் முடிவுகளை அறிவிப்பார்.


வாக்கு எண்ணிக்கையின்போது கட்சி முகவர்கள் செல்போன், லேப்டாப், எலக்ட்ரானிக் பொருள்கள், பேனா, ஆயுதம் உள்ளிட்ட பொருள்கள் எடுத்து வரக்கூடாது. முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.


வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. ஒவ்வொரு சுற்றின் முடிவுகளும் தகவல் பலகையில் எழுதப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரும் வரை கேமராவில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. 


ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தலா 5 விவிபேட் இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும். அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் முடிந்த பிறகு, இறுதி முடிவு அறிவிக்கப்படும். வாக்கு எண்ணும் பணியில் தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் உள்பட 1500 பேர் ஈடுபடுகின்றனர். இவ்வாறு ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்