சேலம் அமானி கொண்டலாம்பட்டி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தம்மநாயக்கன்பட்டி ரயில்வே கேட் அருகே ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு, சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விஜய் என்பவர் வேலை செய்து வந்தார்.
கடந்த 15 நாள்களாக எவ்வித முன்தகவலுமின்றி விஜய் வேலையை விட்டு நின்றுவிட்டார். இதனால், வெள்ளிக்கிழமை (பிப். 21) அன்று முருகேசன், விஜய்க்கு செல்போனில் அழைத்து, கடைக்கு மீண்டும் வேலைக்கு வருமாறு கூறினார். இதையடுத்து, விஜயின் அண்ணன் கவுதம் (23), அவருடைய நண்பர்களான ஜாகீர், அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனியைச் சேர்ந்த ஹரிஹரன் (20), சூர்யபிரகாஷ் (20) ஆகியோர் முருகேசன் கடைக்குச் சென்று, விஜய் இனிமேல் வேலைக்கு வரமாட்டான் எனக்கூறி தகராறு செய்துள்ளனர்.
அப்போது அவரை கடுமையாக தாக்கியும் உள்ளனர். மேலும், விஜய் இத்தனை ஆண்டுகள் வேலை செய்ததற்காக அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கத்தியைக் காட்டி மிரட்டி இருக்கிறார்கள். அதற்கு முருகேசன், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதன்பிறகும் அவரை தாக்கியதோடு, தீர்த்துக்கட்டி விடுவோம் என்றும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முருகேசன், கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஜவுளி நிறுவன உரிமையாளரை தாக்கியதாக கவுதம், அவருடைய நண்பர்களான ஹரிஹரன், சூர்யபிரகாஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.