Skip to main content

“முதல்வர் தனது பேச்சை நிரூபிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது” - வானதி சீனிவாசன்

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

bjp mla vanathi srinivasan talk about north indian workers

 

வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைப்பவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற அச்சம் காரணமாக, தமிழகத்தில் பணியாற்றி வரும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது பெரும் கவலை அளிக்கிறது. இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் இந்தியாவில் எங்கும் பணியாற்றும், வாழும் சுதந்திரத்தை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மாநிலத்திற்குச் சென்று பணியாற்றுவது அங்கேயே பல தலைமுறைகளாக வாழ்வது என்பது இந்தியாவில் காலம் காலமாக நடந்து வருகிறது. பாஜக மகளிரணி தேசியத் தலைவரான பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் சென்று வந்துவிட்டேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்கிறேன். கொச்சினிலிருந்து 400 கிலோமீட்டர் கடல் தாண்டி உள்ள லட்சத்தீவில் கூட தமிழர்களைச் சந்தித்தேன். என்னைக் கண்டதும் சொந்த உறவை கண்டது போல ஓடி வந்து அன்போடு பேசினார்கள்.

 

தலைநகர் டெல்லி, சண்டிகர், மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களின் உருவாக்கத்தில், வளர்ச்சியில் தமிழர்களுக்கு பெரும் பங்களிப்பு இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருக்கிறார். மும்பை, டெல்லி, பெங்களூரு மாநகராட்சிகளில் தமிழர்கள் கவுன்சிலர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அப்படியெனில் அங்கெல்லாம் எவ்வளவு தமிழர்கள், எவ்வளவு காலமாக வசித்து வந்திருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த ஆண்டு சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் நான் பிரசாரம் செய்தபோது, அங்கு ஏராளமான தமிழர்களைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் சண்டிகர் மாநகரம் உருவாக்கப்பட்டபோது தமிழகத்தின் கடலூர், சேலம், விழுப்புரம் போன்ற பகுதிகளிலிருந்து தொழிலாளர்களாக சென்றவர்களின் வாரிசுகள் என்பதை அறிய முடிந்தது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் வசிக்கவில்லை. வேலை செய்யவில்லை. அனைத்து மாநிலங்களிலும் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பணியாற்றுகிறார்கள். இன்று இந்தியாவின் ஒவ்வொரு பெரு நகரமும் ஒரு மினி இந்தியாவாக தான் இருக்கிறது.

 

தமிழக மக்கள் எந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லை. அனைவரையுமே சகோதரர்களாக பார்த்து தான் தமிழர்கள் பழகி வருகிறார்கள். ஆனால் ஒரு சில அமைப்புகள் அரசியல் ஆதாயத்திற்காக மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கில், வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைத்து வருகிறார்கள். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறோம். வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரும் தாங்களாகவே தமிழகத்துக்கு வருவதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த கடைகளின் உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள், தங்களுக்கு வேலை செய்ய ஆட்கள் தேவை என்பதற்காக ஏஜெண்டுகள் மூலம் பீஹார், மேற்குவங்கம், அசாம், ஜார்க்கண்ட், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருகிறார்கள். வட மாநிலத் தொழிலாளர்கள் இல்லையென்றால் தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் ஸ்தம்பித்து விடும். வளர்ச்சி பாதிக்கும் என்று திமுகவை ஆதரிக்கும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போன்ற அமைப்புகளே கூறி வருகின்றன. வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சம் காரணமாக வெளியேறுவதால் தங்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர் (சைமா) வேதனை தெரிவித்துள்ளனர்.

 

மார்ச் 1 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தான் தேசிய அரசியலில் இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அவரது பேச்சை நிரூபிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்தியா என்பது ஒரே தேசம். இந்த தேசம் அனைவருக்கும் சொந்தம் என்பது தான் தேசிய அரசியல். எனவே, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் அமைப்புகள், அதன் தலைவர்கள், தனி மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்களில் அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்கள், யாராக இருந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதனை முதலமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்